வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதில்லையென சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி நேற்று முன்தினம் (8) தெரிவித்துள்ளதாவது, நாட்டு வளர்ச்சியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த வடகொரியா விரும்பினால் அவர்களுக்கு உதவியளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இருந்தும், கொரிய தீபகற்பம் அணு ஆயுத ஆபத்தில்லாத பகுதியாக விளங்க வேண்டும் என்பதற்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
எனவே, வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களுக்கோ, அந்த ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய ஏவுகணைத் திட்டங்களுக்கோ ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்.
மேலும், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற முறையில், வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை நாங்கள் அமுல்படுத்துவோம் என கூறியுள்ளார்.