கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின், பயிற்றப்பட்ட ஆசிரியர்களை பாடசாலைகளுக்குக் கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2019இல் புதிய கல்வி முறைமையை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில், நேற்று புதன்கிழமை (09) பிரதமரிடம் கேள்விகளைக் கேட்பதற்கான நேரத்தின்போது, எட்வட் குணசேகர எம்.பி கேட்டிருந்த கல்வி முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
கடந்த காலத்தில், பாடசாலைகளுக்கோ, இன்றேல் மாணவர்களுக்கோ, தேவைக்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அரசியல் நியமனங்களே வழங்கப்பட்டன. அதிபர்கள் பலருக்கும் அரசியல் நியமனங்களே வழங்கப்பட்டுள்ளன.
பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், இன்னும் 10 வருடங்களுக்குள் ஓய்வு பெற்றுவிடுவர். இதற்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் ஆசிரியர்கள் பயிற்றப்படவில்லை. பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் சீர்குலைந்துள்ளன. இந்த நிறுவனங்களைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையுள்ளது.
பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு ஏற்ப பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.
பட்டதாரிகளுக்கு, விடயதானங்களுக்கு ஏற்ப பயிற்சியளிக்க வேண்டும்.பல்கலைக்கழகத்துக்குள்ளேயே பயிற்சியளிக்கும் முறையை உருவாக்கவேண்டும்.
க.பொ.த உயர்தரத்துக்குப் பின்னர் ஆசிரியராக்கி, 5,6 வருடங்களுக்குள் பட்டதாரியாக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அக்காலப்பகுதிக்குள் பயிற்றப்பட்ட ஆசிரியராக மாற்றவேண்டும்.
இதனை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. மாகாண சபைகளுடன் இணைந்தே செய்யமுடியும். விஞ்ஞானம், தொழிநுட்பமின்றி அபிவிருத்தி செய்யமுடியாது’ என்றார்.