அம்பாறை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகள் மற்றும் வசதி குறைந்த குடும்பத்தினருக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரைவில் பல்வேறு திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
கட்சித் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் அனுசரணையுடன் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அங்கத்துவ வாரத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருதில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு காரியாலயத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
“இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆயிரம் யுவதிகள் தையல் பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் பயிற்சியின் இறுதியில் அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களை வழங்குவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் 500 பேருக்கு சுயதொழில்களுக்கான உபகரணங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக சம்மாந்துறையில் கைத்தொழில் வலயம் ஒன்றை நிறுவி, தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் ஒலுவில், பாலமுனை பிரதேசங்களை மையப்படுத்தி 500 பேருக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு பாரிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டங்கள் யாவும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அடுத்த வாரமளவில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து, இவற்றுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் 10 இலட்சம் தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்துள்ள உறுதி மொழிக்கேற்ப இரண்டு இலட்சம் தொழில் வாய்ப்புகளை தனது அமைச்சின் மூலம் வழங்குவதற்கு எமது தலைவர்- அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொறுப்பேற்றுள்ளார். அவற்றுள் எமது அம்பாறை மாவட்டத்திற்கான பங்கினை மேற்படி திட்டங்கள் ஊடாக வழங்குவதற்கு அமைச்சர் முன்வந்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வாறான சுயதொழில் திட்டங்களுக்கு மட்டுமல்லாமல் அரச தொழில் வாய்ப்புகள் மற்றும் உதவித் திட்டங்கள் அனைத்துக்கும் கட்சியின் பிரதேச மத்திய குழுக்கள் மற்றும் வட்டாரக் குழுக்களின் சிபார்சுகளுடனேயே பொருத்தமானவர்களை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, முன்னாள் கல்முனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.வை.சித்தீக் (சமுர்த்தி உத்தியோகத்தர்), முன்னாள் கல்முனை பிரதேச சபையின் ஐ.தே.க. உறுப்பினர் எஸ்.ரி.கபீர், முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் ஐ.எல்.ஏ.ராசிக், முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் சாய்ந்தமருது மத்திய குழு தலைவரும் ஓய்வு பெற்றகல்விப் பணிப்பாளருமான எம்.ஐ.எம்.முஸம்மில், முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது 5ஆம் பிரிவின் முன்னாள் தலைவர் எம்.ஐ.அலியார், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தொடர்பு அதிகாரி ஏ.எல்.ஜஹான், கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் பொதுசனத் தொடர்பு அதிகாரி எஸ்.ஏ.வஹாப், கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.தில்சாத், விளையாட்டு உத்த்டியோகத்தர் ஏ.எம்.எம்.றிபாஸ், சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.எம்.அனலைஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.