கூரகலயில் ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதேசம் பௌத்தர்களின் புனிதபூமியாகும். இது எமது பூர்வீக தொல்பொருள் பிரதேசமாகும். நாட்டிலுள்ள தொல்பொருள் சட்டத்தைப் பயன்படுத்தி கூரகலயில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கூரகல விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ‘கூரகலயில் அமைந்துள்ள முஸ்லிம்களின் வணக்க ஸ்தலம் இன்னும் இயங்கிவருகிறது. அப்பகுதியிலுள்ள சட்டவிரோத கட்டடங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன.
முஸ்லிம்களின் வணக்கஸ்தலத்துக்கு பெளத்த புனித பூமிக்குள் நிலம் வழங்கப்படவில்லை. இவ் வணக்கஸ்தலம் தொடர்ந்தும் இயங்கி வருகிறது. நாட்டில் அமுலிலுள்ள தொல்பொருள் சட்டத்தினால் இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கூரகலயில் காணப்படும் புராதன கல்வெட்டில் அப்பிரதேசம் பௌத்த புனித பூமியென்றும் அதற்குள் சட்ட விரோதமாக உட்பிரவேசிப்பதோ அழிவுகளை ஏற்படுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிவுறுத்தல்கள் இன்று மீறப்பட்டுள்ளன. எனவே தொல்பொருள் சட்டங்களுக்கு அமைவாக அவ்வாறானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
முன்னாள் பிரதமர் ஆர்.பிரேமதாசவின் காலத்திலேயே கூரகலயில் முஸ்லிம் வணக்க ஸ்தலம் ஸ்தீரம் பெற்றது. இதற்கு அப்போதைய அமைச்சர் அபுசாலி உதவியாக இருந்தார் எனத் தெரிவித்தார்.