மியன்மாரில் 50 வருடத்திற்கும் மேற்பட்ட இராணுவ ஆட்சியையடுத்து முதலாவது சிவிலியன் ஜனாதிபதியாக ஹதீன் கயாவ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவரான ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரான ஹதீன் கயாவ் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து உரையாற்றுகையில், இது ஆங் சான் சூகியின் வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த வெற்றி எனது சகோதரி ஆங் சான் சூகியின் வெற்றியாகும். அவருக்கு நன்றி” என அவர் தெரிவித்தார்.
ஆங் சான் சூகியின் காலஞ்சென்ற தாயாரைக் கௌரவப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள டாவ் கின் கி மன்றம் என்ற தொண்டு ஸ்தாபனத்தில் சிரேஷ்ட பதவி வகித்து வரும் கயாவ், ஒருசமயத்தில் ஆங் சான் சூகியின் சாரதியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு ரீதியில் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கு தடையை எதிர்கொண்டுள்ள ஆங் சான் சூகி, எந்த வழிமுறையிலாவது நாட்டை ஆட்சி செய்யப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
ஹதீன் கயாவ் ஜனாதிபதி தெரிவுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றத்தில் 652 வாக்குகளில் 360 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அதேசமயம் இராணுவத்தால் நியமிக்க ப்பட்ட அவரது போட்டி வேட்பாளரான மயின்ட் சவே 213 வாக்குகளைப் பெற்றுள்ளார்.