Breaking
Fri. Nov 22nd, 2024

– அஸீம் கிலாப்தீன் –

முதல் உலகிலுள்ள சுமார் 65க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள Street View Map இனை கூகுள் ஏர்த் (Google Earth) மென்பொருளின் மூலமாக மிகத்துல்லியமான முறையில் பார்வையிடலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த 65க்கும் அதிகமான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குகிறது. பொதுவாகவே சமகால உலகில் தொழிநுட்பவளர்ச்சியின் அவசியமானது சகலருக்குமே மிகவும் இன்றியமையாததாக காணப்படுவதை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

http://www.google.com/maps/streetview/#sri-lanka-highlights

அதேபோன்று சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஒரு பாரிய தொழிநுட்ப பரப்பினுள்ளே நமது இலங்கை நாடு உள்வாங்கப்பட்டுள்ளதை நினைத்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். இருந்த போதிலும் அவ்வப்போது அளவுக்கதிகமான வரம்புமீறிய தொழிநுட்பப்பாவனையால் சில சமுதாய சீர்கேடுகள் இடம்பெறுவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது.

அந்த வரிசையில் தான் தற்போது கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த Street view முறைமையின் மூலமாகவும் சில சங்கடங்கள் ஏற்பட்டிருப்பதையும் இந்த சங்கடங்களும் சலனங்களும் எதிர்காலத்தில் பாரியளவில் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

கூகுள் வரைபடத்தை தயார் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்தியேக வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தொழிநுட்பங்களுடன் கூடிய சக்திவாய்ந்த கமராக்கள் இந்த Street View மென்பொருளுக்கான புகைப்படங்களை சேகரிப்பதற்காக பயன்படுத்தப்ட்டுள்ளன. இதன்மூலம் நாட்டிலுள்ள
அனைத்து பிரதான வீதிகளும் அதிகபட்சமான உள்ளக வீதிகளும் முப்பரிமாண (3D) தோற்றத்தில் மிகத்துல்லியமான முறையில் படம்பிடிக்கப்பட்டு குறித்த Street View மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கின்றபோது வீதிகள், வாகனங்கள், வீதியால் செல்லும் பாதசாரிகள் மாத்திரமன்றி வீதியோரங்களில் அமைந்துள்ள வீடுகளும் வீடுகளின் உட்புறங்களும் மிகத்துல்லியமான முறையில் 3D தொழிநுட்பத்துடன் படம்பிடிக்கப்பட்டு பதிவேற்றப்பட்டிருப்பதை காணமுடிகிறது.

இப்போது புதிதாக அந்த Street View இனை பார்த்துவிட்டு “இதோ என்னுடைய படம், என்னுடைய வாகனம், எனது வீடு, எனது கடை” என்று பலரும் சமூக
வலைத்தளங்களில் ஆனந்தப்பரவசத்துடன் குதூகலித்து வருவதை நாம் காண்கிறோம்.

ஆனால், கணிசமான இடங்களில் பெண்கள் வீதிகளில் மிகவும் சுதந்திரமாக நடமாடக்கூடிய புகைப்படங்களும் வெளியாகிருக்கின்றன. மாத்திரமன்றி வீடுகளில், வீட்டு வாசல்களில் பெண்கள் சாதாரணமாக நடமாடக்கூடிய சில புகைப்படங்களும் பதியப்பட்டே வெளியாகியுள்ளது. வீடுகளின் உள்வாசல், மலசலக்கூடம் போன்ற ஒரு வீட்டின் அந்தரங்க பகுதிகளைக்கூட இந்த கூகுள் கமராக்கள் விட்டுவைக்கவில்லை.

வீட்டிலிருந்து இயல்பாக வீதிக்கு வந்து காய்கறி வாங்குகின்ற முஸ்லிம் பெண்கள், பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புக்களுக்காக வீதியால் செல்லும் மாணவிகள் மாத்திரமன்றி எது வித முனேற்பாடுகளும் இல்லாமல் அவசர தேவைகளின் நிமித்தம் திடீரென தெருக்கதவை திறந்த பெண்களைக்கூட இந்த கூகுள் கமராக்கள் மிகவும் துல்லியமாகவே இலக்கு வைத்துள்ளன.

கிழக்கிலங்கையில் கலாச்சாரப்பின்னணியுடன் முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடிய காத்தான்குடி பிரதேசத்தில் கூகுள் நிறுவனத்தினால் சேகரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

இவையனைத்தும் இந்த Street View மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்ட நேற்றைய தினத்தில் ஒருசில மணிநேரங்களுக்குள் கிடைக்கப்பெற்ற தகவல்கள்தான். இன்னும் நாட்கள் நகர்கின்றபோது, இந்த கூகுள் Street View இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமாகின்றபோது நாட்டின் பல இடங்களிலும் பலவகைப்பட்ட கோணங்களிலும் சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகக்காத்திருக்கின்றன.

அவ்வாறு வெளியாகின்ற பட்சத்தில் மேலும் பல அதிர்ச்சிகரமான காட்சிகளும் வெளியாகி மக்கள் மத்தியில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம்.

சிலருடைய வாழ்க்கைப்பாதைகள் கூட திசைமாறலாம். இதற்கான மாற்றுத்தீர்வென்ன? ஆணோ, பெண்ணோ ஒருவருடைய அனுமதியின்றி அவரை புகைப்படம் எடுத்து இணையத்தளங்களில் பகிரங்கமாக உலாவ விடுவதன் பாரதூரத்தை நாம் ஒவ்வொருவரும் நன்று அறிவோம்.

அந்த வகையில் நாம் வசிக்கின்ற பிரதேசங்களுக்குள் எதுவித முன்னறிவித்தலும் இல்லாமல் உள்நுழைந்து நமது வீடுகளின் உட்புறங்களை, நமது தாய்மார்களை, சகோதரிகளை, மனைவிமார்களை மிகத்தெளிவாக படம்பிடித்து இவ்வாறு பகிரங்கமாக இணையதளங்களில் பறக்கவிடுவதை இந்த இஸ்லாமிய சமூகம் எவ்வாறு கருதுகிறது?

கூகுள் நிறுவனத்தால் அவ்வாறு பிடிக்கப்பட்ட புகைப்படங்களில் முகத்தை மறைத்துத்தான் அந்த நிறுவனம் பதிவேற்றியுள்ளதென்று யாராவது முற்போக்குவாதிகள் வாதாடினால் அதைவிடவும் வடிகட்டிய மடமை வேறொன்றுமிருக்க முடியாது. காரணம், அடையாளமே தெரியாத அளவுக்கு அப்புகைப்படங்களில் முகங்கள் முற்றாக மறைக்கப்படவில்லை.

ஒரு வாதத்திற்கு வெளியிடப்பட்ட புகைப்படங்களில் அவ்வாறு முகங்கள் மறைக்கப்பட்டிருக்கிறதென்பதை ஏற்றுக்கொண்டாலும் கூட அசல் (Original) புகைப்படங்கள் கூகுள் நிறுவனத்திடம் இருக்கவேதான் செய்யும். அப்புகைப்படங்களை கூகுள் நிறுவனம் தவறான வழியில் பயன்படுத்தமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் “நாம் அவற்றை தவறாக பயன்படுத்தமாட்டோம்” என நம் ஒவ்வொருவரிடமும் ஏதாவது உறுதி மொழி எடுத்துள்ளார்களா? இவ்வாறு கூகுள் அல்லாத பிறிதொரு தனியார் அல்லது அரச நிறுவனம் ஒன்று நமது உள்வீட்டை, நமது தாய்மார், சகோதரிகள், மனைவிமார்களை அவர்கள் வீடுகளில் இருக்கும்போது, வீதியால் செல்லும்போது புகைப்படம் பிடித்து இணையதளங்களில் வெளியிடுவதை நாம் அனுமதிப்போமா?

அனுமதிக்கமாட்டோம் என்றால் கூகுள்நிறுவனத்தினுடைய இந்த செயற்பாட்டை மாத்திரம் எவ்வாறு அங்கீகரிக்கமுடியும்?

பொதுமக்களுடைய அடிப்படை உரிமை மற்றும் மானம் சம்பந்தமான ஒரு விவகாரத்தை இவ்வாறு தான்தோன்றித்தனமான முறையில் மேகொள்வதற்காக
கூகுள் நிறுவனத்திற்கு அனுமதியும் அதிகாரமும் வழங்கியது யார்? மாத்திரமன்றி ஏற்கனவே பாவனையிலுள்ள Google Earth மற்றும் Google Map ஆகிய இரண்டு மென்பொருட்களும் ஒருசில மாதங்களுக்கொரு தடவை அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் எதிர்வரும் காலங்களில் இந்த Street View மென்பொருளானது குறிப்பிட்ட சில மாதங்களுக்கொரு தடவை அப்டேட் செய்யப்படவுள்ளதாகவும் அறியமுடிகிறது. அவ்வாறு அப்டேட் செய்வதற்காக மறுபடியும் நம் நாட்டுக்குள் இந்த கூகுள் வாகனம் பிரவேசிக்கின்றபோது அவ்வாகனத்தை முஸ்லிம் பிரதேசங்களுக்குள் நுழையவிடாமல் தடுப்பதா?

அல்லது உயர்தொழிநுட்ப கமராக்கள் பொருத்தப்பட்ட கூகுள் வாகனம் நமதூர்களுக்குள் பிரவேசித்துவிட்டது என்ற செய்தியை கேள்விப்பட்டதும் அவசர தேவைகளுக்காக வீதியால் செல்கின்ற நமது பெண்கள் அனைவரும் இழுத்துப்போர்த்திக்கொண்டு அருகிலுள்ள வீடுகளுக்குள் ஓடியொழிந்து அவ்வீடுகளின்
கதவுகள் அனைத்தையும் இறுக மூடிக்கொள்வதா?

இதற்கான மாற்றுத்தீர்வென்னவென்பதை இந்த சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும்தான் சிந்திக்கவேண்டும். அத்தோடு சமூக மட்டத்தில் அக்கறையுடன் செயற்படுகின்ற சமூக நிறுவனங்கள், தலைமை நிறுவனங்கள், குறிப்பாக அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவுக்கு இவ்விடயத்தில் பாரிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது.

எனவே மேலைத்தேய யூத, கிறிஸ்த்தவ ஏகாதிபத்திய பின்புலத்தைக் கொண்ட கூகுள் நிறுவனம் தொழிநுட்ப முன்னேற்றம் என்னும் போர்வைக்குள் இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் மிகவும் சூட்சுமமாக ஊடுருவி முஸ்லிம்களுடைய உயிரிலும் மேலான மானம், மரியாதை மற்றும் கலாச்சாரத்தை காற்றில் பறக்கவிடுவதற்கு முன்னால் முஸ்லிம்கள் என்ற தனித்துவமான உணர்வுள்ள நாம் ஒவ்வொருவரும் உடனடியாக விழித்தெழவேண்டும்.

http://www.google.com/maps/streetview/#sri-lanka-highlights

By

Related Post