Breaking
Mon. Nov 25th, 2024

பௌத்த பீட சியாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் அனுநாயகத் தேரரான வண. வரகாகொடை ஞானரத்தன தேரர் இன்று மாலை  அஸ்கிரிய பீடத்தின் 22 வது மகாநாயக்கத் தேரராக தெரிவு செய்யப்பட்டார்.

அஸ்கிரிய பீடத்தின் பௌத்த தேரர்களது நிர்வாக சபையினர் ஒன்று கூடி அவரைத் தெரிவு செய்தனர்.  ஆஸ்கிரிய பீடத்தின் 21 வது மகாநாயக்கராக பதவிவகித்து மரணமான கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி அவர்களது இடத்திற்கே இவர் 22 வது மகாநாயக்கராகத் தெரிவானார்.

ராஜகருனா நவரத்தன அத்தபத்து வாசல முதியான்சலாகே உபாசக அவர்களுக்கும் ஹிங்குல்வெல அலகொளதெனிய துக்கன்னாராலலாகே புஞ்சி அம்மா உபாசக மாதா அவர்களுக்கும் மகனாக 1942ம் ஆண்டுமார்ச் மாதம் 18ம் திகதி இவர் பிறந்துள்ளார். அப்போது இவர் ராஜகருனா நவரத்ன அத்தபத்து வாசல முதியான்சலாகே ரத்நாயக்கா என்ற இவர் மாணவ பிக்குவாக 1955 ஏப்ரல் மாதம் 7ம் திகதி துறவு வாழ்க்கைக்கு உள்ளீர்க்கப்பட்டார்.

பதுளையிலுள்ள வித்யோதங்க பிரிவேனா மற்றும் வத்துகாமம் தர்மதுவீப்ப பிரிவேனா, அஸ்கிரிய மகாவிகாரைப் பிரிவேனா,  முதலியவற்றில் இவர் ஆரம்பக் கல்வியைப் பெற்றுள்ளார். பின்னர் வித்தியாலங்கார பல்கலையில் சாஸ்திரவேதி (கலைப்பட்டதாரி) பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.

1962 ஜூன் மாதம் 9ம் திகதி அஸ்கிரிய விகாரையின் உபசம்பதா மண்டபத்தில் வண. பிக்குவாக உபசம்பதா பதவியைப் பெற்றார். கண்டி வித்தியார்த்த கல்லூரி கொத்மலை மடக்கும்புற வித்தியாலயம், வலள பாத்த தும்பறை மகாவித்தியாலயம், உற்பட பல்வேறு பாடசாலைகளில் 23 வருடகாலமாக ஆசிரியராக இவர் கடமை புரிந்துள்ளார். 1990ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் திகிதி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் நிர்வாக சபைக்கு நியமனம் பெற்ற வரகாகொட ஞானரத்ன ஹிமி 2009 மே மாதம் 1ம் திகதி சரேஸ்ட நிர்வாக சபை அங்கத்தவராக நியமனம் பெற்றார்.அதே நேரம் இவர் 2000 ம் ஆண்டில் பதுளை முதியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். இவர் பொல்கொல்ல உடகுன்னேபான போதிமல்கட விகாரையின் விகாராதிபதியாகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கத் தேரராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பிரிவின் பதிவாளர் வண. ஆனமடுவே தம்மதஸ்சி தேரர் அறிவித்தார். பெருந்தொகையான பௌத்துறவிகளும ஆதரவாளர்களும் அஸ்கிரிய பீடத்தில் குழுமி இருந்தனர். இவர் தெரிவானது தொடர்பாக அஸ்கிரி பீடத்தில் இருந்து மல்வத்தை பீடத்திற்கு தகவல் எடுத்துச்  செல்லும் ‘தெக்கும் யாமே பெரஹரா’ பின்னர் இடம் பெற உள்ளது.

By

Related Post