சீன விஜயத்தின்போது பெற்றுக்கொண்ட பொருளாதார உபாயங்களை, இரண்டு தசாப்த காலத்துக்குப் பயன்படுத்த இணக்கம் காணப்பட்டது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிடைத்த நன்கொடை, நான்கு துறைகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் என்றார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தல், ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குதல், அபிவிருத்தி நோக்கிப் பயணித்தல் ஆகியவற்றை பிரதான கருப்பொருட்களாகக் கொண்டே அரசாங்கம் பயணிக்கின்றது என்றும் அவர் சொன்னார்.
சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
துருக்கி, ஈரான், பாகிஸ்தானுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் அதனூடாக சர்வதேச ரீதியில் பொருளாதாரச் சந்தையில் நுழைவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். அமெரிக்காவின் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னரே அந்நாட்டுடனான பொருளாதார உறவை மேம்படுத்திகொள்வது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.