ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு எடுக்கும் தீர்மானங்கள் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. எனினும் மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாவார். எனவே ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை வழிநடத்துவது போன்று அவரை வழிநடத்த முடியாது. அவரை இராஜதந்திர ரீதியில் அணுகவேண்டும். ஆகவே அவரது விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரத்தியேகமான முறையில் கையாள்வார் என திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு கட்சிக்கு இரு தலைவர்கள் இருக்க முடியாது. எனவே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கிறார். அவர் கட்சியின் தலைமைப் பதவியினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடமிருந்து பறித்தெடுக்கவில்லை. மஹிந்த ராஜபக் ஷவே தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்தி அதன் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தார்.
கடந்த காலங்களில் எமது கட்சி உறுப்பினர்களை கிராமப்புறங்களில் விரட்டியடித்தனர். அப்போது ஜனாதிபதியே அவர்களை பாதுகாத்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் தூரநோக்குடைய இராஜதந்திரியும் ஆவார்… எனவே கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டவர்களை அவர் உடனடியாகத் தண்டிக்கவில்லை. அவர்களுக்கு பல சந்தர்ப்பங்களை வழங்கினார். எனினும் தொடர்ந்தும் சந்தர்ப்பங்களை வழங்கிக்கொண்டிருக்க முடியாது.
ஒரு கட்டத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். ஹைட்பாக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களையும் இவ்வாறே நோக்க வேண்டியுள்ளது. மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் காலியில் நடைபெறவுள்ளது.. எனினும் மற்றுமொரு குழு வேறொரு கூட்டத்தை நடத்துவதற்கான ஆயத்தங்களையும் மேற்கொள்கிறது. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட்டாலும் எமது கட்சி தனிக் கட்சியாகும். தேர்தலில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாகவே போட்டியிடவுள்ளோம். . ஆகவே கட்சியின் கொள்கைகளுக்கும் தீர்மானங்களும் எதிராக எந்தவொரு உறுப்பினரும் செயற்பட இடமளிக்கப்பட மாட்டாது. அது தொடர்பில் கட்சியின் மத்திய குழு தீர்மானம் ஒன்று எடுத்துள்ளது. அந்தத் தீர்மானம் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு எடுக்கும் தீர்மானங்கள் கட்சியின் சகல உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. எனினும் மன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் விடயத்தை பிரத்தியேகமாகக் கையாள வேண்டியுள்ளது. ஏனெனில் அவர் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மாத்திரமல்ல, கட்சியின் முன்னாள் தலைவருமாவார். எனவே ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை வழிநடத்துவது போன்று அவரை வழி நடத்த முடியாது. அவரை பிரத்தியேகமான முறையில் இராஜதந்திர ரீதியில் அனுக வேண்டும். ஆகவே அவரது விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையாழ்வார்.
தேசிய அரசாங்கத்தினூடாக பாரியளவானஅபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கு அரசியல் பேதங்களுக்கப்பால் நின்று சகலரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் இந்த அரசாங்கம் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வில்லையென சிலர் விமர்சித்தனர். ஆனால் தற்போது அபிவிருத்திக்கான நிதி சகல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. எனவே விரைவில் வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகும் என்றார்.