இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலையைக் கொண்ட நாட்களாக கடந்த சில நாட்கள் கணிக்கப்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரத்தில் காற்றின் வேகம் வெகுவாகக் குறைவடைந்துள்ளமை, வானத்தில் மேகங்கள் குறைந்துள்ளமை, சூரியன் பூமிக்கு சரி நேராக சஞ்சரித்தல் போன்ற காரணங்களாலேயே இந்த அதி உஷ்ண காலநிலை தோன்றியிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அதிகூடிய வெப்பநிலையான 38.9 பாகை (செல்சியஸ்) வவுனியாவிலும் அதற்கடுத்து பொலநறுவையில் 36.9 பாகையும், குருநாகல் மற்றும் இரத்தினபுரியில் 36.2 பாகையும், பொத்துவிலில் 35.2 பாகையும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பின் சராசரி வெப்பநிலை 33 பாகை செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாகவும் இங்கு காற்றின் வேகம் மணிக்கு 16 கிலோமீற்றர்களாகக் குறைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனவும் கூறிய சரத் பிரேமலால்,
வசதி வாய்ப்புள்ள கொழும்பு வாசிகள் இந்தக் கோடை காலத்தை சமாளிப்பதற்காக நுவரெலியா போன்ற மலைப் பிரதேசங்களில் முற்றுகையிட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.