பாகிஸ்தானிலிருந்து, ஈரானிய மீனவக் கப்பல் ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போது தென் கடலில் வைத்தும் நீர்கொழும்பு பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்ட 14 வெளிநாட்டவர்களில் 13 பேர் உட்பட 16 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோட்டை நீதிவான் நீதிமன்றின் நீதிபதி லங்கா ஜயரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அத்துடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் 14 பேரிடமும் மேலதிக விசாரணை ஒன்றினை சிறையில் வைத்தே மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் மீளவும் நடத்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் அனுமதி வழங்கினார்.
110 கோடி ரூபா பெறுமதியான 110 கிலோ ஹெரோயின் விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.