திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான விசேட கூட்டம் நேற்று (19) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது.
கிராம மட்டத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களாகிய நீங்கள் பொறுப்புணர்வுடன் செயற்படும் போது அங்கு ஏற்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளை கட்டுப்படுத்த முடியுமென்றும் கிராமங்களிலே உள்ள மதத் தலைவர்கள், பெரியார்கள் மற்றும் சிவில் சங்கங்களை இணைத்து இவற்றை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய முடியுமென்றும் இதன் போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
உரிய அனுமதி பெறாமல் பெண்கள் வெளிநாடு செல்லல், வறுமை நிலை, மற்றும் குடிபோதை ஆகியவற்றிற்கு அடிமையாதல் போன்ற செயற்பாடுகள் காரணமாக அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் ஏற்படுவதாகவும் அதிகமான சிறுவர்கள் உறவினர் மற்றும் அவர்களுக்கு நன்றாக தெரிந்தவர்களால் துஷ்பிரயோகத்திற்கு ஏதோ ஒரு வகையில் உட்படுத்தப்படுவதாகவும் அவற்றுள் பல சம்பவங்கள் வெளிக்கொணரப்படாமல் மூடி மறைக்கப்படுவதாகவும் உத்தியோகத்தர்களாகிய நீங்கள் அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் விரைவாக செயற்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, இலங்கை பெண்கள் செயலகத்தின் உதவிப்பணிப்பாளர் சீதா கருணாரத்ன, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தீபாணி அபேசேகர உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.