ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் தினேஷ் குணவர்த்தன எம்.பி. தலைமையிலான மஹிந்த ஆதரவு அணியினருக்கு இதுவரையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை.
எனவே தற்போது அவர்கள் ஜெனிவா அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்வதால் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு எந்த விதத்திலும் முட்டுக்கட்டையிட முடியாதென நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமக்கான அந்தஸ்து வழங்கப்படாமை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக ஜெனிவா சென்றுள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் தம்மை எதிர்க்கட்சியினராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான மஹிந்த ஆதரவு அணி தொடர்ந்தும் முன்வைத்து வந்தது.
அதேபோல் கடந்த காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவாவின் உதவியை நாடியிருந்தமை குறித்து இவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். அரசாங்கத்தை ஜெனிவா செல்ல வேண்டாம் என கூச்சலிட்டவர்கள் தமக்கு நியாயம் கோரி ஜெனிவா சென்றிருப்பது வேடிக்கையானது.
ஆட்சி மாற்றத்தின் முன்னரும் பின்னரும் இந்த எதிர்த்தரப்பினருக்கு ஜெனிவா சர்வாதிகாரத்தின் கோட்டையாக தென்பட்டது. அதற்காக நல்லாட்சி அரசாங்கமும் ஜெனிவாவுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் தற்போது இவர்கள் ஜெனிவா சென்றுள்ளனர். இதிலிருந்து இவர்களின் நிலைப்பாட்டை விளங்கிக்கொள்ள முடிகிறது.
எவ்வாறாயினும் எந்த ஒரு நாட்டினதும் எதிர்க்கட்சியினர் தமது உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றம் சுமத்தி முறைப்பாடு செய்தால் குறித்த முறைப்பாடு தொடர்பில் தீர்க்கமாக ஆராயப்படும். அது போன்று தற்போது ஜெனிவா சென்றுள்ள எமது நாட்டு தரப்பினரின் குற்றச்சாட்டு தொடர்பிலும் ஆராயப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏனெனில் இதுவரையில் இந்த தரப்பினர் எமது நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை. அதனால் இவர்களின் முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இது தொடர்பில் பெரிதும் ஆராயப்படாது என்பதே எமது நிலைப்பாடு. அத்துடன் இதுவரையில் இவர்கள் ஒரு கட்சியை உருவாக்கவும் இல்லை. புதிய கட்சியொன்றை உருவாக்கினாலும் அந்தக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பை பார்க்கிலும் வலியதாக இருக்க வேண்டும். அவ்வாறான கட்சியை அவர்கள் உருவாக்கும் சாத்தியமும் தற்போதைக்கு இல்லை. எனவே இவர்களின் ஜெனிவா பயணம் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்கு முட்டுக்கட்டையிடுவதாக அமையாது என்றார்.