அழகிய மீன் தொட்டி ஒன் றில் சுடு நீரை ஊற்றுவது போலவே சம்பூர் அனல் மின் நிலையம் இலங்கையில் அமையப்போகின்றது. முழு உலகமே அனல் மின் நிலையத்திட்டத்தை கைவிடுகையில் இலங்கை மாத்திரம் அதனை ஆதரிப்பதையிட்டு சர்வதேசம் வியப்படைந்துள்ளது. எவ்வாறாயினும் உத்தேச அனல் மின் நிலையத் திட்டம் இந்தியாவிற்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுத்து இலங்கை மக்களுக்கும் இயற்கைக்கும் அழிவைத்தர போகின்றது என சூழலியளாலர் கலாநிதி எப். ரணில் சேனாநாயக்க தெரிவித்தார்.
சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் வீரகேசரி பத்திரிகைக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். சூழலியளாலர் கலாநிதி எப். ரணில் சேனாநாயக்க வழங்கிய செவ்வியின் முழுமை பின்வருமாறு,
சம்பூர் அனல் மின் நிலையத்தின் தேவை
சம்பூர் அனல் மின் நிலையத்தை இலங்கையில் அமைப்பதானது தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் மோசமான நிலையாகும். டிசம்பர் மாதம் எமது ஜனாதிபதி பாரிஸ் நகரிற்கு சென்று கால நிலை தொடர்பாக இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். இலங்கை, கனிய காபன் பயன்பாட்டிற்கு அப்பாற் சென்று அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் என ஜனாதிபதி இதன் போது தெரிவித்திருந்தார். இவ்வாறான பயன்பாடுகளினால் ஏற்படக் கூடிய பாதிப்பு முழு உலகிற்கும் தாக்கம் செலுத்தும். ஒரு நாட்டிற்கு மாத்திரம் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. காபனி ரொக்சைட் எனப்படும் வாயு வெளியான பின்னர் இந்த உலகின் கால நிலையில் வெப்ப நிலை அதிகரிக்கும்.ஒவ்வொரு நாளும் வெப்பமடையும் தன்மை அதிகரிக்கும். இதனால் மழை மற்றும் சூரிய ஒளி மற்றும் காற்று என அனைத்தும் மாற்றமடையும். எனவே தான் முழு உலகமும் இது குறித்து பேசுகின்றது. அனல் மின் நிலையத்தை ஒரு போதும் அமைக்கப்போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு அடிமைப்பட்டு பாதிக்கப்பட்டோம். ஆனால் எதிர்காலத்தில் ஒரு போதும் அனல் மின் திட்டத்திற்கு செல்லப்போவதில்லை என அமெரிக்கா வெளிப்படையாகவே கூறியுள்ளது. இவ்வாறான நிலைமை உலகில் காணப்படுகையில் இல ங்கை அனல் மின் நிலையத் திட்டத்திற்கு செல்கின்றமை பாரிய முட்டாள் தனமாகும்.
அதேபோன்று எமது நாட்டில் அனல் மின் நிலையத்திற்கு தேவையான கரி எமது நாட் டில் இல்லை. வெளிநாடுகளில் இருந்தே கொண்டு வரப்பட வேண்டும். மேலும் அனல் மின் நிலையத்திற்கு நாம் பழக்கப்பட்டு விட்டால் அதில் இருந்து விடுபடுவது என்பது கடினமானதாகும். உலகே அனல் மின் நிலையத்தில் இருந்து விடுபடுகையில் இலங்கை மாத்திரம் ஏன் இந்த திட்டத்திற்கு செல்ல வேண்டும் என நாம் கேள்வி எழுப்பினோம். அதற்கு மறுமொழியாக விலை குறைவினையே அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். அதிகாரிகளின் இந்தக் கூற்றை நாங்கள் ஆய்விற்கு உட்படுத்தினோம்.இதன் பிரகாரம் இவர்களின் இலாப கணக்கு விபரம் எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதாவது உண்மையான கணக்கை இவர்கள் வெளியிடவில்லை. அனல் மின் நிலையத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட்ட நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான உபகரணங்கள் அனைத்துமே இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டும். இதனை காண்பித்தே இவர்கள் இலாபம் என கூறியுள்ளனர். உண்மையை மூடி மறைத்து நாட்டிற்கு பொய்யை கூறினார்கள். உண்மையாகவே இந்த அனல் மின் திட்டத்தினால் எமக்கு ஏற்படக் கூடிய செலவீனம் அதிகமாவது மாத்திரமல்ல நாட்டு மக்களுக்கு பாரியளவில் சுகாதார பிரச்சினைக்கும் காரணமாகி விடும். இதனால் தான் இந்த சம்பூர் திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம். கூடிய விரைவில் இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும். இதனால் பாரிய பிரச்சினைகள் நாட்டில் ஏற்படும்.
இந்தியா எமது அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளது. இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு மின் சாரத்தை கொண்டு செல்வதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. ஆகவே சம்பூர் அனல் மின் நிலையத்தினால் 500 மெகா வோட் மின்சாரமே எமக்கு கிடைக்கப்போகின்றது. இது மிகவும் சிறிய அளவாகும். இந்த நிலையில் இந்தியா இலங்கையில் இருந்து மின்னை பெற்றுக் கொள்வதற்காக பாரிய அளவிலான கேபல் வயரை போடுவதற்கு திட்டமிட்டமையானது எதிர் காலத்தில் மேலும் அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கான முன்னெடுப்புகளாகும். ஏன் அவர் கள் அவ்வாறு செய்கின்றனர். இந்தியா எடுத்துக் கொண்டால் சுவாச ரீதியிலான பிரச்சினைகள் காரணமாக ஒரு நாளைக்கு ஆயிரம் கணக்கானோர் இறக்கின்றனர். இதனால் அவர்கள் இலங்கையில் அனல் மின்நிலையத்தை ஸ்தாபித்து மின்சாரத்தை பெற்றுக் கொண்டு இலங்கையில் வாழும் மக்களை பாதிப்புற செய்கின்றனர். இதற்கு எமது அதிகாரிகளும் நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்குவதை நினைக்கும்போது கவலையாக உள்ளது.
அனல் மின் நிலையத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள்
சம்பூர் அனல் மின் நிலையம் எமக்கு பல்வேறு வழிகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. சம்பூர் அனல் மின்நிலையம் செயற்பட ஆரம்பித்தவுடன் அதிலிருந்து கனிய வாயுக்கள் பல வெளியாகும். மனித சுவாசித்திற்கோ பொதுவான சுகாதார சூழலுக்கோ எவ்விதத்திலும் ஒவ்வாத கன வாயுக்களாகவே இவை கருதப்படுகின்றன. மெகாரி, கெட்மியம் மற்றும் லெக் போன்ற வாயுக்களே இவை. இவை எந்த வகையிலும் மனித சுவாசத்திற்கு ஏற்புடையதல்ல. தற்போதும் வட மத்திய மாகாணத்தில் வாழும் விவசாயிகள் பலருக்கு சுகாதார ரீதியிலான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதற்கு அவர்கள் உண்ணும் உணவு மற்றும் குடி நீரில் விவசாயத்திற்காக பயன்படுத்திய இரசாயன பொருட்களின் உயிரியல் தன்மைகள் தேங்கி இருந்து இவை உடலுக்குள் சென்றமையினாலேயே பல்வேறு நோய்களில் விவாசாயிகள் சிக்குண்டுள்ளனர். இந்த நிலை பூமியில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் காரணமாகவே ஏற்பட்டது. ஆனால் சம்பூர் அனல் மின் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டால் அதிலிருந்து வெளியாகும் விஷவாயுக்கள் அமில மழையை பெய்ய வைத்து நிலைமையை மோசமாக்கி விடும். அது மாத்திரமல்ல விஷ கனியங்கள் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் புகையில் இருந்து தாழ்வடைந்து காற்றில் கலந்து சுவாச பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
சம்பூர் அனல் மின் நிலையம் ஸ்தாபிப்பது தொடர்பில் அமைக்கப்பட்ட அறிக்கையில் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் புகை நேரடியாக செல்லாது என குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு என காண்பித்துள்ளனர். இது நடைபெறக் கூடிய விடயமல்ல. அந்த பிரதேசத்தில் ஒரு பாரிய மலை காணப்படுமாயின் சரி. இல்லை என்றால் பருவப்பெயர்ச்சி காற்றில் அநுராதபுரம், பொலன்னறுவை, தம்புள்ள மற்றும் சீகிரியா எனச் செல்லும். தற்போது இலங்கையில் காணப்படும் மரபுரிமைகளுக்கு என்ன நடக்கும் ? கல் விகாரை மற்றும் சீகிரியா போன்றவற்றுக்கு அமில மழை பெய்து பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். ஏனைய நாடுகளில் அமில மழை பெய்தமையினால் கற்கலாலான சிற்பங்கள் கரைந்து விட்டன. சுமார் 2000 வருடங்களாக நாம் பாதுகாத்த எமது இந்த மரபுரிமைகளை இவர்கள் அழிக்க முற்படுகின்றனர். இதனை விட மோசமான நிலைமையை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் எமக்கு ஏற்படும். அதாவது அமில மழையி னால் செடிகொடிகள் அழிந்து விடும். ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் உட்பட உலகில் அனல் மின் நிலையம் காணப்படும் நாடுகளில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. தாவரங்களில் காணப்படும் உயிர் நிலைகளை அமில மழை அழித்து விடும். தவறுதலாயேனும் சம்பூர் அனல் மின் நிலையத்தினால் வெளியாகும் புகை மேகத்தில் கலந்து எமது மகாபோதி மீது அமில மழையை பொழிந்தால் என்ன செய்வது? இதனை யாரிடம் கூறுவது? ஒரு தடவை மகாபோதிக்கு ஆபத்தை ஏற்படுத்த முற்பட்டனர். அது எமது வரலாறு. ஆனால் அது முடியாமல் போனது. இந்தியாவிற்கு அனல் மின் நிலையத்தை அமைக்க கொடுப்பதன் ஊடாக அதனை செய்வதற்கு சந்தர்ப்பம் அழிப்பதா? என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும். இலங்கையர் என்ற வகையில் இந்த திட்டத்தை அனுமதிப்பதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்காக இதனை நாங்கள் சிந்திக்க வேண்டும்
நுரைச்சோலை அனல் மின்நிலையம் அமைக்கும் போதும் நாங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம். ஆனால் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அதன் பாதிப்புகள் பெரும் அளவில் காணப்படாமைக்கு இரண்டு காரணங்கள் காணப்படுகின்றன. அதாவது பழைய இயந்திரங்களை கொண்டு வந்து இந்த திட்டத்தை முன்னெடுத்தமையினால் அது தொடர்ந்தும் உடைந்து செயலிழந்து போகின்றது. மற்றது தெற்கில் இருந்து வரும் பருவப்பெயர்ச்சி அந்த பிரதேசத்தை தழுவிச் செல்கின்றது. ஆனால் தற்போது சம்பூரும் நுரைச்சோலையும் செயற்பட ஆரம்பித்தால் பாதிப்புகள் மிக மோசமானதாக இருக்கும். நுரைச்சோலை அமைந்துள்ள பிரதேசத்திற்கு தற்போது சென்று பார்த்தால் புகையினால் மாத்திரம் அல்ல அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் விஷம் கலந்த சாம்பலினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வில் மிகவும் மோசமான நிலைக்கு இன்று நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்மித்த மக்கள் வாழ்கின்றனர். புத்தளத்தில் வாழும் மக்களிடம் போய்க் கேட்டால் அவர்கள் கூறுவார்கள். பெண்கள் கருவுற்றால் அவர்களை வேறு இடங்களுக்கு அனுப்பி விடுகின்றனர். அவர்கள் மிகவும் அச்சத்துடனேயே உள்ளனர். இவ்வாறு நிலைமை இருக்கின்ற நிலையில் அரசாங்கத்தின் அதிகாரி ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்கு எமது உரிமைகள் தொடர்பில் தீர்மானிக்க முடியும். மக்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுவது எவ்வாறு ? எனவே தான் இந்த அனல் மின் திட்டத்தை நாங்கள் எதிர்க்கின்றோம். அனல் மின் திட்டம் தொடர்பில் நாட்டில் கலந்துரையாடியிருக்க வேண்டும். இந்திய அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக நாங்கள் அடிமைகளாக வேண்டுமா ?
இந்தியா மற்றும் சீனா
இந்தியா மற்றும் சீனாவில் தான் உலகில் அதிகமானோர் அனல் மின் நிலையத்தி னால் உயிரிழக்கின்றனர். இது தொடர்பாக பெரும் தொகையான ஆவணங்கள் காணப்படுகின்றன. இந்த இரண்டு நாட்டலும் தான் அனல் மின் நிலையம் காரணமாக நாளொன்றுக்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர். தமது மக்கள் இறந்து விட்டனர் இனி இலங்கை மக்களை கொன்று விட்டு மின் சக்தியை பெற்றுக் கொள்வோம் என்று அவர்கள் நினைக்கின்றனரோ தெரியவில்லை. இந்த நாடுகளில் அனல் மின் நிலையத்தினால் பாரியளவில் பாதிப்புகள் இருக்கையில் அதனை ஏன் எமக்கு கொண்டு வந்து தர வேண்டும். மின் சக்தியை பெற்று கொள்வதற்கு மாற்று வழியே இல்லையா? இருக்கின்றது. சூரிய ஒளியில் இருந்து மின் சக்தியை பெற்றுக்கொள்ள முடியும். இந்தியாவில் அதற்கான தொழில் நுட்பம் காணப்படுகின்றது. ஏன் அனல் மின் நிலையத்தை கொண்டு வர வேண்டும். நண்பன் ஒருவன் பரிசு வழங்கினால் அது நன்மைக்காகத்தானே இருக்க வேண்டும். இந்தியா எமது நண்பனாக இருந்தால் ஏன் அனல் மின் நிலையத்தை எமக்கு தர வேண்டும். முழு உலகமும் இதனை அறியும். எமது நாட்டில் உள்ள அப்பாவி மக்களுக்கு இது தெரியாது. இதனால் தான் ஏமாற்றப்படுகின்றனர்.இது தவறாகும்.
அனல் மின் நிலைய நன்மைகள்
மின் குமிழை ஏற்றுவதற்கு, குளிரூட்டியை செயற்படுத்துவதற்கு போன்ற நன்மைகளை தவிர வேறு ஒன்றும் இல்லை. இதனால் முழு உலகமும் மாசடைகின்றது. பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த அனல் மின் நிலையத்தின் குளிர் தன்மையை பேணுவதற்கு தண்ணீர் தேவைப்படுகின்றது. திருகோணமலையில் ஒரு கடற்பகுதியில் இருந்து நீரைப் பெற்றுக் கொள்ளவே உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது பல மீன்களின் இனப் பெருக்கம் இடம்பெறும் இடமாகும். இங்கு அனல் மின் நிலையத்தின் நீரை கலப்பது என்பது மீன்கள் உள்ள தொட்டியில் சுடு நீரை கலப்பது போன்றதாகும். எனவே மூளையுள்ள அனைவருக்கும் என்ன நடக்கின்றது என்பதை அறிய முடியும். எமது சூழலை பாதுகாப்பவர்கள் இதனை நினைத்துப் பார்க்க வில்லையா ? எமது நாட்டை பாதுகாப்பதற்கு நியமிக்கப்பட்டவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் எங்கே? ஏன் மறைந்திருக்க வேண் டும்.
திருகோணமலை
திருகோணமலை என்பது அனைத்து சர்வதேச நாடுகளும் கைப்பற்ற விரும்பும் ஒரு இடமாகும். எனவே தான் அனைத்து நாடுகளும் இங்கு அவர்களது வர்த்தக நடவடிக்கைளை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். இதை விட திருகோணமலை கடல் மிகவும் ஆழமானது. துறைமுகத்திற்கு உள் நுழையும் பிரதேசம் மிக ஆழமானதாக காணப்படுகின்றது. இந்த இடத்திற்கு நீர்மூழ்கி கப்பல்களை கொண்டு வர முடியும். எனவே உலகின் அனைத்து நாடுகளுக்கும் திருகோணமலை முக்கியமாகும். இங்கிருந்து கொண்டு இந்து சமுத்திரத்தை மிக எளிதாக கண்காணித்து நிர்வகிக்க முடியும்.
இன்று சென்று நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு அருகில் வாழும் மக்களை கேளுங்கள். உண்மை நிலை புரியும். சம்பூரில் வாழும் மக்களை அழைத்து கொண்டு நுரைச்சோலைக்கு சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுங்கள் அவர்களது வாழ்வை விளங்கிக் கொள்ள முடியும்.
சம்பூர் அனல் மின் நிலையத்தில் இருந்து நாட்டை பாதுகாப்பது எவ்வாறு
சம்பூர் அனல் மின் நிலையத்தில் எவ்விதமான பாதிப்பும் நாட்டிற்கு இல்லை என அறிக்கை தயாரித்தவர்களின் உண்மைகளை கண்டறிய வேண்டும். இதன் பின்னர் செலவுகளை அறிய வேண்டும். அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் உண்மையான செலவை கண்டறிய வேண்டும். இதனை விட இலாபமாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியுமா? என்பதையும் கண்டறிய வேண்டும். ஆனால் செலவு குறைந்த பாதிப்பு இல்லாத எத்தனையோ வழிகள் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள உள்ளது. இவை மறைக்கப்படுகின்றன. ஏன் எமது நாட்டு மக்களுக்கு இவ்வாறு செய்கின்றனர்.
பொது மக்களை விழிப்பூட்ட நடவடிக்கை எடுத்தல்
ஆம். நிச்சயமாக பத்திரிகைளுக்கு அனல் மின் நிலையங்களினால் ஏற்பட கூடிய ஆபத்துக்களை எழுதுகின்றேன். நேர்காணல்களில் கலந்து கொள்கின்றேன். நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே நமது முதற் கடமை என்பதை தெரியப்படுத்த விரும்புகின்றேன். மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது அவசியமாகும்.
சம்பூர் அனல் மின் நிலைய ஒப்பந்தம்
ஆம், ஒப்பந்தங்களை யார் செய்கின்றனர். நான்கு ஐந்து பேர் சென்று கைச்சாத்திட்டத்திற்காக முழு நாட்டையும் விற்று விட முடியுமா? அதற்கு அதிகாரம் இருக்கின்றதா? எத்தனையோ ஒப்பந்தங்கள் உள்ளன. பாதிப்புகளை எம்மால் ஆதாரபூர்வமாக முன் வைக்க முடியும். எனவே ஒப்பந்தத்தை கைவிட வேண்டும். சட்டவிரோதமான அனல் மின் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு அதிகாரிகள் வர வேண்டும். அனைத்தையும் நிறுத்தி விட்டு உண்மைகளை கண்டறிய வேண்டும். அதன் பின்னரே அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.
உலகில் வேறு நாடுகளில் அனல் மின் நிலையம் தடை செய்யப்பட்டுள்ளதா?
உலகில் அனைத்து நாடுகளுமே அனல் மின் நிலைய திட்டத்தை கைவிட்டுள்ளன. இலங்கை மாத்திரம் ஆரம்பிப்பதனால் அதனைக் கண்டு சர்வதேச நாடுகள் ஆச்ச ரியமடைகின்றன. சூழல் தொடர்பில் பேசு கின்றனர். அழகிய நாடு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் ஏன் இந்த அழகிய நாட்டை மாசடையச் செய்கின்றனர் என சர் வதேச நாடுகள் கேள்வியெழுப்புகின்றன. அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை நிறுத்துவதற்கு அழுத்தங்கள்
ஆய்வு அறிக்கைகள் மற்றும் அனல் மின் நிலையத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் தொடர்பில் அனைத்து தரப்புகளுக்கும் கடி தம் அனுப்பியுள்ளேன். பல தரப்புகளுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். இதனை விட இலங்கையர்களுக்கு பயிற்சியளிக்க விரும்புகின்றேன். அனல் மின் நிலையத்தி னால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை அறிந்து கொண்டால் பிரஜைகள் என்ற வகையில் அனைவராலும் அதற்கு எதிராக செயற்பட முடியும்.அறியாமல் இருந்தால் ஒன்றும் கூற முடியாது. எனவே தான் ஊட கங்களுக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்பும் கட மையும் உள்ளது. நாட்டிற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் என்ன நடக்கப் போகின் றது என்பதை அறிந்தால் இவ்வாறான திட்டங்களை தடுக்க முடியும். எனவே அறிவதற்கு முன்னர் தீர்மானம் எடுப்பது தவறாகும்.