– பரீல் –
நான்கு வருட காலமாக பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக் கொள்வதற்கு மாற்றீடாக தம்புள்ளையில் அடுத்த மாதம் புதிய காணி வழங்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ளை நகரத்துக்கு அண்மையில் சுமார் 150 மீற்றர் தூரத்தில் தம்புள்ளை பள்ளிவாசலுக்கான காணியொன்றினை இனங் கண்டுள்ளதாகவும், எதிர்வரும் மே மாதத்தில் இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகுமெனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தம்புள்ளையில் பள்ளிவாசலை தற்போது அமைந்துள்ள இடத்திலிருந்து வேறிடத்துக்கு அகற்றிக் கொள்ள பள்ளிவாசல் நிர்வாகம் இணங்கியுள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே புதிய பள்ளிவாசலொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்கு நகருக்கு அண்மையில் வசதியான இடத்தில் காணி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று கடந்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ரஞ்சித் அலுவிகார, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி மற்றும் தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் நிர்வாக சபை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் போது ஹைரியா பள்ளிவாசலுக்கு அண்மையில் வாழும் 19 குடும்பங்களுக்குமான காணியும் புதிய பள்ளிவாசல் காணிக்கு அருகில் வழங்கப்பட வேண்டுமென பள்ளிவாசல் நிர்வாகம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்தது.
அது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
‘தம்புள்ளை நகருக்கு அண்மையில் பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்வதற்கு காணி வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வந்துள்ளதால் தற்போது இருக்கும் இடத்திலிருந்து தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றிக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம். சலீம்தீன் தெரிவித்தார்.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரத்தில் பெரும்பான்மையினவாதிகளால் தாக்குதல்களுக்குள்ளாகியது. தம்புள்ளை ரங்கிரி ரஜமகாவிகாரை அதிபதி இனாமலுவே ஆனந்த சுமங்கல தேரரின் தலைமையிலான குழுவினரே தாக்குதல்களை நடத்தினர்.
பள்ளிவாசல் மிம்பர் மற்றும் குர்ஆன் பிரதிகள் சேதமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் பல மட்டங்களில் பேசப்பட்டன. தீர்வு பெற்றுக் கொள்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக் கொள்வதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் மறுத்து வந்தது. இதேவேளை இனாமலுவே ஆனந்த சுமங்கல தேரர் பள்ளிவாசல் தம்புள்ளை புனித பூமி பிரதேசத்திலிருந்தே அகற்றப்பட வேண்டுமென சவால் விட்டு வந்தார்.
இந்நிலையிலேயே தற்போது தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்துக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகமும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தீர்வுக்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.