பத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி., பிரபா கணேசனை ஸ்தாபகத் தலைவராகவும் ந.குமரகுருபரனை தலைவராகவும் கொண்ட ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ப.உதயராசாவை தலைவராகக் கொண்ட சிறிரெலோ, இரா.பிரபாகரனை தலைமையாகக் கொண்ட ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ஈழ விடுதலை அமைப்பு, தமிழ் மக்கள் அமைப்பு, ஜனநாயக போராளிகள் கட்சி, சர்வதேச இந்து குருமார் அமைப்பு, ஜனநாயக மறுசீரமைப்பு இயக்கம் ஆகியன இணைந்துகொண்டுள்ளன.
ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணியின் ஆரம்பம் குறித்து அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை பம்பலப்பிட்டி ஓசன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த அமைப்பு தற்போதைக்கு ஒரு அரசியல் கட்சியாக செயற்படாது. தமிழ் மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு அமைப்பாக மாத்திரமே இருக்கும். தேவை ஏற்படின் எதிர்வரும் தேர்தல் காலத்தின் போது அரசியல் கட்சியாகவும் உருவெடுக்கும் என்று ஜனநாயகத் தமிழ் தேசிய முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பிரபா கணேசன் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்காது தற்போது மௌனித்துள்ளன. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காகவே நாம் புதிய கூட்டணியினை ஆரம்பித்துள்ளோம். தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யத் தக்க வகையில் நாம் குரல் எழுப்புவோம் என்றும் அவர் செய்தியாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.
தற்போது தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டு மட்டத்தில் குரல் எழுப்ப ஒரு அமைப்பு இல்லாமையினாலேயே நாம் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் பிரபா கணேசன் தெரிவித்தார்.