ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்துடன் இணைந்து சுற்றுலாத்துறை தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றினை எதிர்வரும் ஜுலை மாதம் 11 முதல் 14 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
‘அபிவிருத்தி, சாமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு சுற்றுலாத்துறை ஓர் ஊக்கியாக’ என்ற தலைப்பின் கீழ் சர்வதேச மாநாட்டினை நடாத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சும் அதன் கீழ் இயங்கும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த மாநாடு, ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பின (UNWTO) தொழில்நுட்ப உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இவ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் இருந்து சுமார் 70 வெளிநாட்டவர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வளவாளர்கள், பேச்சாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட மேலும் சுமார் 30 வெளிநாட்டவர்கள் பங்குபற்றுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில், இம்மாநாடு 2016 மே மாதம் கொண்டாடப்படும் இலங்கை சுற்றுலா பொன்விழா கொண்டாட்டத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். இச்சர்வதேச மாநாட்டினை யுத்தம் நிகழ்ந்த பிரதேசத்தில் நடாத்துவதனால் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக அமையும். அதனடிப்படையில் குறித்த சர்வதேச மாநாட்டினை 2016 ஆம் ஆண்டு 11-14 ஆம் திகதி வரை பாசிக்குடாவில் நடாத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் ஏ.இ. அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திர்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச மாநாட்டில் ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பின் செயலாளர் நாயகம் ரிபாய் (Mr. Rifai ), மற்றும் நோபல் பரிசு பெற்ற பங்களாதேஷ் நாட்டின் திரு. முகமட் யூசுப் ( Dr.Muhammad Yunus ) உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.