யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்ளக பொறிமுறை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜூன் மாதம் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நிலையில் அந்த அறிக்கை சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் வகையிலும் அதே நிலையில் உண்மைகளை கண்டறியும் வகையிலும் பலமான ஒன்றாக அமையும். வருட இறுதிக்குள் நிரந்தர தீர்வை எட்டும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் என அரசாங்கம் தெரிவித்தது.
முன்னாள் போராளிகளின் கைது மற்றும் முகாம்கள் தொடர்புடைய பாதுகாப்பு விடயங்களில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில் இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர் நிபுணர் குழுவினர் நேற்று முன்தினம் இலங்கையின் நிலைமைகளில் முரண்பாட்டுக் கருத்துகளை முன்வைத்துள்ள நிலையில் அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.