ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வார இறுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். இவ்வார இறுதியில் இந்தியாவின் புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அப்பயணத்தின் போதே இந்தியப் பிரதமரை சந்திக்கவுள்ளார்.
பிரிட்டன் அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலண்டனில் நடைபெறவுள்ள ஊழலுக்கு எதிரான உலகத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி லண்டன் பயணமாகவுள்ளார். லண்டன் சென்று மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் நாட்டுக்கு திரும்பும் வழியில் எதிர்வரும் 13 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் புதுடில்லிக்கு சென்று அவருடனான கலந்துரையாடலொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாரதீய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் அங்கு செல்லவுள்ள ஜனாதிபதி மத்திய பிரதேசத்திலுள்ள இந்து ஆலயத்தில் நடைபெறும் கும்பமேள சமய வைபத்திலும் பங்கேற்கவுள்ளார். எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஊழலுக்கு எதிரான இலண்டன் சர்வதேச மாநாட்டினை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் ஏற்பாடு செய்துள்ளார்.