– சுஐப் எம் காசிம் –
”நீரின்றி அமையாதுலகு” என்பது அர்த்தமுள்ள ஆன்றோர் வாக்கு. உலகில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் உயிர் வாழ நீர் இன்றி அமையாதது. வாழ்வின் ஜீவ நாடி நீர்.
உலகில் வாழும் மக்களின் பல்வேறு நடவடிக்கைகளினால் நீர் மாசடைந்து வருகின்றது. சுத்தமற்ற நீரை குடிக்கவும், குளிக்கவும் சமைக்கவும் உபயோகிக்க முடியாது. நோய்களால் பீடிக்கப்படுவர் மக்கள்.
எனவே ஏழை முதல் செல்வன் வரை குழந்தை முதல் முதியோன் வரை அனைவரும் அருந்தும் நீரும் சமைக்கும், குளிக்கும் நீரும் பரிசுத்தமானதாக அமைய வேண்டும்.
இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமறும் கிராமங்களிலே அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மீளக்குடியேற்றம் என்பது இலேசான காரியமல்ல. அதுவும் இருபத்தைந்து ஆண்டுகளாக தமது பூர்வீக கிராமங்களை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறும் போது அவர்களின் அடிப்படை வசதிகள் பூச்சியத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்த மக்களுக்கு பிரதான பிரச்சினை நீரும் மின்சாரமுமே!
பழைய கிணறுகள் தூர்ந்து விட்டன. குளித்த கிணறுகள் காடு மண்டிக்கிடக்கின்றன. குழாய் நீர் வசதி இருந்த கிராமங்களில் குழாய்களும் தண்ணீர் தாங்கிகளும் இருந்த இடம் தெரியவில்லை. இந்த நிலையிலே மீளக்குடியேறியுள்ள மக்கள் தமது குடியேற்ற கிராமங்களுக்கு நீர் வசதி செய்து தருமாறு பல தடவை வேண்டுகோள் விடுத்தனர்.
அமைச்சர் ரிஷாட் நீர் வழங்கள் அமைச்சர் அல்ல. எனினும் வடபுல வன்னி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர். தான் சார்ந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் படுகின்ற கஷ்டங்களை நேரில் கண்ட அவர் இந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு நீர் வழங்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த பிரச்சினையின் ஆழத்தை விபரித்தார். அமைச்சரவையில் மக்கள் படும் கஷ்டங்களை எடுத்துக் கூறினார். எனினும் அந்த மக்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில் தற்காலிக தீர்வொன்று கிடைக்க வழி செய்தார்.
உள்நாட்டு வெளிநாட்டு பரோபகாரிகளும் செல்வந்தர்களும் நிறுவனங்களும் அவரின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உதவினர்.
அந்த அடிப்படையில் முசலிக் குடியேற்றக்கிராமங்களான வேப்பங்குளம், பீ பீ பொற்கேணி, எஸ் பி பொற்கேணி, அகத்திமுறிப்பு, பண்டார வெளி, மேத்தன் வேளி, சிலாவத்துறை, கொண்டச்சி, புதுவெளி, கரடிக்குளி, பாலைக்குளி, பிச்சை வாணிப நெடுங்குளம் ஆகிய கிராமங்களுக்கும் சிங்கள கம்மான, தமிழ்க் கிராமமான முள்ளிக்குளம் மற்றும் மாந்தைப் பிரதேச சபைக்குட்பட்ட விளாங்குழி, சன்னார், சொர்ணபுரி, அடம்பன், நெடுவரம்பு, வட்டக்கண்டல் மற்றும் தலை மன்னார் கிராமங்களுக்கும் அமைச்சர் குழாய்க்கிணறுகளை வழங்கி வருகிறார். அத்துடன் அந்தப் பிரதேசங்களில் கிணறுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இந்த மக்களுக்கு இந்தத் தற்காலிக தீர்வு ஓரளவு நிம்மதியை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
நீர் எவ்வாறு வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறதோ அவ்வாறே மின்சாரமும் முக்கியத்துவம் பெறுகின்றது. குப்பி விளக்குகளிலும் மெழுகு வர்த்திகளிலும் படித்த காலம் தற்போது இல்லை. நவீன வசதிகள் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் தேவைப்படுகின்றன. வெளிச்சம் பரவும் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கவும் கம்பியூட்டரை இயக்கவும் சமைக்கவும் உடை அழுத்தவும் இன்னும் எத்தனையோ தேவைகளுக்கு மின்சாரம் தேவைப்படுகின்றது.
எனினும் குடியேற்ற மக்களுக்கு இத்தனை தேவைகளையும் தாண்டி பாம்புக்கடியிலும் மிருகங்களின் தொல்லையிலும் தங்களை காப்பாற்ற மின்சாரம் தேவைப்படுகின்றது. இருள் சூழ்ந்த நேரங்களில் இவற்றின் தொல்லையால் மரணங்களும் சம்பவிக்கின்றன.
எனவே மீள்குடியேறிய மக்கள் நிம்மதியாக வாழ மின்சாரம் அத்தியாவசியமாகின்றது. அமைச்சர் ரிஷாட் அனைத்துக் குடியேற்றக் கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்திலும் வவுனியா மாவட்டத்திலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி அமைச்சர் ரிஷாட் இலவச மின் இணைப்புக்களை பெற்றுக்கொடுத்தமையை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தம்.
அமைச்சரின் இந்த முற்போக்கு பணியையிட்டு அண்மையில் இந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட்டை அந்த மக்கள் நன்றியுணர்வுடன் பாராட்டினர்.