முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு எந்தவித தடையுமில்லையென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
யுத்தத்தில் உயிர்நீத்த படையினருக்கான நினைவஞ்சலி நிகழ்வு (தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016) தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நினைவேந்தல் நிகழ்வுகளோ நினைவுத்தூபி அமைத்தலோ மக்கள் நினைவாக மேற்கொள்வதில் எந்தவிதமான பிரச்சினைகளுமில்லை. புலிகள் நினைவாக புலிக்கொடி ஏற்றுவது, நினைவேந்தல் நடத்துவது, புலிகள் தொடர்பானவற்றை உபயோகிப்பது என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நல்லிணக்கத்தின் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்கின்ற போது இருதரப்பிலும் அடிப்படைவாதிகள் இருந்து கொண்டு பிரச்சினைகளை தோற்றுவிக்க முயல்கின்றனர். அதற்கு எந்தவகையிலும் இடமளிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புலிகள் அமைப்பினை அரசாங்கம் தடை செய்துள்ளது. அது ஒரு பயங்கரவாத அமைப்பு. புலிகள் தொடர்பான எந்த நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்படக்கூடாது என்பதே அரசாங்கத்தின் தீர்மானம். ஆயினும் யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வினை நடாத்த முடியும். அதற்கு எவ்வித தடையும் கிடையாது. எனினும் இந்நிகழ்வுகள் எவற்றிலும் புலிகளின் கொடியை உபயோகிப்பதோ, புலிகள் தொடர்பான வேறு எவற்றினையும் உபயோகிப்பதோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கண்காணிப்பதற்கு நாம் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் பணிப்புரைகளை வழங்கியுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபிஜீ.கித்சிறி, ரணவிரு சேவா திணைக்களத்தின் தலைவி திருமதி. அனோமா பொன்சேக்கா ஆகிரும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
nl