Breaking
Sat. Nov 23rd, 2024

தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் எதிர்வரும் 18 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள படைவீரர்கள் ஞாபகார்த்த திடலில் இடம்பெறவுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ள கலாச்சார நிகழ்வுகளையடுத்து நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) இடம்பெற்ற தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் மனிதாபிமான செயற்பாட்டின் போது தமது உயிர்களை தாய் நாட்டிற்காக அர்ப்பணித்த மற்றும் தமது உடல் அவயவங்களை தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் அரசாங்கத்தினால் ரணவிரு ஞாபகார்த்த மாதம் ஏற்கனவே தொடக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் படைவீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இடர்பாடுகள் என்பனவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்னுரிமையளிக்கின்றது எனவும் விருசர வரப்பிரசாத அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சுமார் 15,000 ற்கு மேற்பட்ட படைவீரர்கள் அதன் பலாபலனை அனுபவித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ஓய்வுபெற்ற படைவீரர்களுக்கு உதவும் வகையில் புதிய திணைக்களமொன்றை நிறுவும் எண்ணம் கொண்டுள்ளதாகவும் இவ்வாறு நிறுவப்படும் புதிய திணைக்களத்தின் மூலம் தொழிற் பயிற்சிகள், சமூக ஏற்பினை மேம்படுத்தல் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகள் தீர்த்தல் என்பனவற்றை நோக்காகக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன் அங்கவீனமுற்ற படைவீரர்களின் சம்பளப் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபிஜீ.கித்சிறி, ரணவிரு சேவா திணைக்களத்தின் தலைவி திருமதி. அனோமா பொன்சேக்கா ஆகியோரும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

By

Related Post