தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. அதன் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி வகிக்கிறார்.
சர்வதேச அளவில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியால் வெனிசுலாவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்து, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாட்டால் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் நிறுவனங்களில் நீண்ட கியூ வரிசையில் நிற்கின்றனர். இதனால் அதிபர் மதுரோ மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இதற்கு அதிபர் மதுரோவின் அரசியல் எதிரியும், எதிர்க்கட்சி தலைவருமான ஹென்ரிக் கேப்ரில்ஸ் திவிரமாக உள்ளார். இவர் மூலம் தனது ஆட்சியை கவிழ்க்க ஒரு வெளிநாடு சதி செய்வதாக மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். கராகஸ் நகரில் தனது ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் பங்கேற்று பேசிய அவர் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஒரு வெளிநாடு என அமெரிக்காவை மறைமுகமாக தெரிவித்தார்.
எனவே, அந்த சதியை முறியடிக்க வெனிசுலாவில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அவர் அறிவித்தார். பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் வெனிசுலாவில் உணவு பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன.
அந்த தொழிற்சாலைகளை திறந்து உற்பத்தியை தொடங்க வேண்டும். இல்லாவிடில் தொழிற்சாலைகள் பறிமுதல் செய்யப்படும் என அதிபர் நிகோலஸ் மதுரோ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.