மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் நேற்றிரவு (17) ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் ஐந்து சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக அரநாயக்க பிரதேசத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை தோன்றியிருந்தது.
இன்று அதிகாலை ஐந்து மணி தொடக்கம் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று கேகாலை புளத்கொஹுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் காணாமல் போன 16 பேரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் விமானப்படை ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கம்பஹா தொம்பே பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை மீட்பதற்கும் விமானப்படை ஹெலிகொப்டர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன இதற்கான வேண்டுகோளை விடுத்திருந்ததாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.