ஜனாதிபதிக்கு அருகில் நிழற்படத்தில் நிற்கும் மாணவி தனது காணாமல்போன மகளென குறித்த மாணவியின் தாயார் தமக்கு முறைப்பாடு செய்திருக்கிறார்.
எனவே அவரை அடையாளம் காண உதவுமாறு காணாமல்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் என்.மணிவண்ணன் இது விடயம் தொடர்பாக சுற்றுநிருபமொன்றை சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இச்சுற்றுநிருபத்துடன் குறித்த மாணவி மற்றும் சக மாணவிகளுடன் ஜனாதிபதி அளவளாவும் வர்ண நிழற்படப் பிரதியும் இணைக்கப்பட்டுள்ளது.அதிலே மாணவிகளின் கழுத்துப்பட்டி குளோஸ்அப் காட்சியும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் காணாமல்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம எழுதியுள்ள கடிதத்தின் பிரதியும் இணைக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன பாடசாலை மாணவி’ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
குறிப்பிட்ட மாணவியை அடையாளம் காணும்நோக்கில் சக மாணவிகள் அணிந்திருந்த கழுத்துப்பட்டி எந்தப் பாடசாலைக்குரியது? இந்தப் பாடசாலை எமது வலயத்திலுள்ள ஏதேனும் பாடசாலையா? அப்படிஎனின் தமக்கு அறியத்தருமாறு கேட்கப்பட்டுள்ளது.
தங்கள் வலயத்திலுள்ள கலவன் பாடசாலை அல்லது பெண்கள் பாடசாலையின் கழுத்துப்பட்டி அதிலுள்ள சின்னம் நிறம் பொருந்தினால் அதுபற்றி அறியத்தரவும் எனக் கேட்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நிழற்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த மாணவி காணாமல்போனாரா? அல்லது அவருக்கு என்ன நடந்தது? ஜனாதிபதி எங்கு எப்போது விஜயம் செய்தபோது இந்நிழற்படம் எடுக்கப்பட்டது? என்பது தொடர்பில் எந்த விபரமும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.