தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானத்தை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் காரணமாக உயர் நீதிமன்றத்தினால் தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்துசபாநாயகரினால் தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவான தீர்மானமொன்றும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் அந்த தீர்மானத்தை நீதிமன்றத்தின் கேள்விக்கு உட்படுத்துவது சிறப்புரிமை மீறலா கும். ஆகவே சபாநாயகர் இம்மனு தொடர்பாக தீர்ப்பொன்றை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை இயற்கை அனர்த்தம் தொடர்பான விசேட விவாதத்திற்காக சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.
இதன்போது சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் உட்பட முழு சபையின் கவனத்திற்கும் இந்த விடயத்தை கொண்டு வந்திருந்தார்.
அவர் குறித்த மனு தொடர்பில் விளக்கவுரை ஆற்றுகையில், “
ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம ஆகியோரால் எனக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றுக்கு அமைவாக அரசியலமைப்புக்கு முரணான வகையில் எனக்கு அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கம் தொடர்பான தீர்மானம் மற்றும் அந்த தீர்மானத்துக்கு எந்தெந்த அரசியல் கட்சிகள் அவசியம் என்பது குறித்து சபாநாயகரால் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி தீர்ப்பொன்று வழங்கப்பட்டது. அதன் பிரகாரம் தான் தீர்மானம் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது அந்த விடயம் அனைத்தும் நிறைவுக்கு வந்துவிட்டன. சபாநாயகரின் தீர்ப்பை இனி கேள்விக்கு உட்படுத்த முடியாது. இது இந்த சபையின் அதிகாரங்களின் அங்கமாகும்.
சபாநாயகரினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பதிலளிப்பதற்காக என்னையோ அல்லது எனது சார்பான சட்டத்தரணியையோ நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக வாக்களித்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் என்றும் மனுதாரர் தன்மை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கமொன்று எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்தமான தீர்மானத்தையும் அவர் கேள்விக்குட்படுத்தியுள்ளார். எனினும் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அவர் இங்கு குறிப்பிடவில்லை. பாராளுமன்றத்தினால் மேற்படி செயல்நோக்கு கொண்ட தீர்மானமானது சட்டத்தின் பிரகாரம் அமுலில் கிடையாது எனவும் மனுவில் மனுதாரர் சுட்டிக் காட்டியுள்ளார். இதுபோன்ற பல்வேறு விடயங்கள் இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் அரசியல் அமைப்பினால் எமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சபாநாயகரினால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் பாராளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் கேள்விக்குட்படுத்துவதற்கு ஒப்பானதாகவுள்ளன. இந்த சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கேள்விக்குட்படுத்துவதானது சிறப்புரிமையை மீறும் செயலாகும். அத்துடன் இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட செயலாகும். காரணம் சபாநாயகரினால் வழங்கப்பட்ட தீர்ப்பு மனுவில் வெளிப்படுத்தப்படவில்லை.
மனுதாரர் இந்த சபையில் உறுப்பினராக இருந்தவர் என்ற வகையில் அது தொடர்பில் அவர் நன்கு அறிந்திருக்க வேண்டும். அதை விடுத்து தமக்கு தெரியாது என கூறமுடியாது. மேலும் சபைக்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற அதிகாரங்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறித்த மனுவில் வெளிப்படுத்தப்படவில்லை. எனவே மனுதாரர்கள் இருவரும் வேண்டுமென்றே சிறப்புரிமைமீறல் விடயத்தை கவனத்தில் எடுத்து அது தொடர்பில் தீர்ப்பொன்றை வழங்க வேண்டும். அந்த தீர்ப்பை உயர் நீதிமன்றத்திற்கும் அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
இதேவேளை குறித்த வேண்டுதலை தாமும் முன்வைப்பதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க மற்றும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து தெரிவித்தனர். இது இவ்வாறு இருக்க குறித்த விடயம் தொடர்பில் அதன் போது ஆராய்ந்து பார்க்க சிறு கால அவகாசமொன்றை தருமாறு சபாநாயகர் கருஜயசூரிய உறுதிப்படத் தெரிவித்தார்.