அரசியல் கட்சிகள் குரோத அரசியலை கைவிட வேண்டுமென வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.
பெல்மடுல்ல, கந்தேகெதரவத்த, உடுகல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரோத அரசியலை புறந்தள்ள வேண்டியது அவசியமானது. பழி வாங்கும் எண்ணத்தில் அரசியல் செய்யக் கூடாது, அதில் பயனில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்த சாந்த தொடங்கொட கஹாவத்தை பிரதேசத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
பொதுத் தேர்தலின் போது உபுல் துசார என்பவர் அரசியலுக்காக உயிரைத் தியாகம் செய்தார்.
அரசியல் பேதங்களை களைந்து முரண்பாட்டு அரசியலிலிருந்து விடுபட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலின் போது கொலை செய்யப்பட்ட உபுல் துசாரவின் குடும்பத்திற்கு வீடு ஒன்றை வழங்கும் நிகழ்வின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உபுல் துசாரவின் மூன்று பிள்ளைகளின் கல்விக்காக நிதியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.