அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தையடுத்து கடுமையாக பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் குவிந்து கிடக்கும் அசுத்த கழிவுகளை அகற்றுவதற்கான விசேட பிரிவொன்று நிறுவப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன் யாப்பா தெரிவித்தார்.
கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரகட்சி தலைமையகத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள கால்வாய்களை சுத்தப்படுத்துவதற்காகவும் சீரமைப்பதற்காகவும் 141 மில்லியன் ரூபா நிதியை அமைச்சரவை ஒதுக்கியுள்ளது. அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் இக்குழு இயங்கவுள்ளது.
வெள்ளம் பெருமளவு வடிந்தோடியுள்ள போதும் ஏராளமான குப்பைக்கூளங்கள் குவிந்து கிடப்பது அப்பகுதிவாழ் மக்களுக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளதை நாம் அறிவோம். ஜனாதிபதி செயலாளருடன் நானும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் சம்பவ இடங்களை நேரில் சென்று ஆராய்ந்தோம். குப்பை கூளங்களை விரைவில் அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து தெரிவிக்கையில், இயற்கை அனர்த்தத்தால் நொந்து போயுள்ள மக்கள் ஆத்திரத்தில் கூறும் எதனையும் தான் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் அவர்களிடத்தே இயல்பு வாழ்க்கையை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தான் விரைவில் முன்னெடுப்போம்.
கொலன்னாவை பிரதேசத்தின் குப்பை கூளங்களை அகற்றுவதற்காக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. கொலன்னாவை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படும் சுத்திகரிப்பு பணிகள் பின்னர் கம்பஹா மாவட்டம் வரை விஸ்தரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.