தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று வியாழக்கிழமை (16) தீர்ப்பளித்தார்.
அத்துடன், இந்த மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 384 கிலோகிராம் மீன்கள், நீதவானின் உத்தரவுக்கமைய, நீதிமன்றத்தில் வைத்து நீதவான் முன்னிலையில் ஏல விற்;பனை செய்து, 64,500 ரூபாய் வருமானமும் பெறப்பட்டது.
குருநகர் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களும் 3 நாட்டு படகுகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி வேலணை கடற்பரப்பில் புதன்கிழமை (15) இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களிடமிருந்து மீன்கள் மற்றும் 3 தொகுதி தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்டவர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்கள் நல்ல நிலையில் இருந்தமையால், நீதிவானின் முன்னிலையில் வைத்து மீன்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
மேலும், தங்கூசி வலைகளை அழிப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.