-ARA.Fareel-
இவ்வருடத்திற்கான ஹஜ் ஏற்பாடுகளில் ஹஜ் குழு 2013 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிமுறைகளை (Guide Lines) மீறியுள்ளதாகவும் இவ்வருட ஹஜ் கோட்டா பகிர்வு முறையை இரத்துச் செய்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழி முறைகளின் கீழ் கோட்டாவை மீள் பகிர உத்தரவிடுமாறும் கோரி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் பிரதிவாதிகளாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர், அமைசின் செயலாளர், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச். எம். ஸமீல் மற்றும் ஹஜ்குழு உறுப்பினர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா ஹஜ் முகவர்கள் சங்கத்தின் உப தலைவரும் கரீம்லங்கா ஹஜ் முகவர் நிலைய உரிமையாளருமான எ.சி.பி.எம்.கரீம் உட்பட 9 முகவர் நிலையங்கள் இம்மனுவினைத் தாக்கல் செய்துள்ளன.
சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மனுதாரர்கள் சார்பில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
கரீம் லங்கா ஹஜ் முகவர் நிலைய உரிமையாளர் ஏ.சி.பி.எம்.கரீமை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது அவர் பின்வருமாறு விளக்கமளித்தார்.
‘ஹஜ் ஏற்பாடுகளில் அநீதிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஹஜ் ஏற்பாடுகளுக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
2013 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் தீர்ப்பொன்று வழங்கியுள்ளது.
அந்த வழி முறைகளின் (Guide Lines) படியே ஹஜ் கோட்டா பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வருடம் கோட்டா புதிய முறையில் கையாளப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டுள்ள முகவர் நிலையங்களுக்கு உரிய கோட்டா விபரம் கடித மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 31 முகவர்களுக்கு 100, 59 முகவர்களுக்கு 50, 7 முகவர்களுக்கு 25 என கோட்டா அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை 2240 கோட்டாவே கிடைத்துள்ளது.
கோட்டா நேரடியாக முகவர்களுக்கு வழங்கப்படவில்லை.
திறந்த சந்தையில் விடப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரிகர்களே முகவர்களை தேடிச் செல்லவேண்டியுள்ளது. இதனால் எல்லா பிரதேசங்களிலும் உப முகவர்கள் செயற்பட்டு யாத்திரிகர்களின் கடவுச்சீட்டினை சேகரிக்கிறார்கள். உப முகவர்கள் தங்களுக்கு ஒரு கமிஷனை ஒதுக்கிக் கொண்டு யாத்திரிகர்களை முகவர்களிடம் ஒப்படைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இதனால் முகவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் இதற்கு முன்னைய வருடங்களில் நேர்முகப் பரீட்சையில் முகவர் நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கு அமைவாகவே கோட்டா பகிரப்பட்டது. இம்முறையே சிறந்த முறையாகும். அதனாலே இந்த உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டலை பின்பற்றி கோட்டாவை முகவர்களுக்கு பகிர்ந்து வழங்குமாறு நாம் கோருகிறோம் என்றார்.
ஹஜ் யாத்திரிகர்களின் நலனில் நாம் அக்கறை கொண்டுள்ள அதேவேளை தகுதிக்கும் நேர்முகப் பரீட்சையில் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கும் அமைவாக கோட்டா வழங்கப்பட வேண்டும். என்கிறோம் என்றார்.
முஸ்லிம் சமயவிவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது பின்வருமாறு பதிலளித்தார்.
நீதிமன்றத்திலிருந்து எவ்வித அறிவித்தலும் எமக்குக் கிடைக்கவில்லை. இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் திட்டமிட்டு அனைவரும் நன்மை பெறும் வகையிலே வடிவமைக்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய ஹஜ் வழிமுறை முழுமையாகக் கையாளப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கியுள்ள வழி முறை ஒரு போதும் மீறப்படவில்லை.
தகுதியான சுயாதீன குழுவொன்றே ஹஜ் முகவர்களுக்கான நேர்முகப் பரீட்சையை நடத்தியது.
ஹஜ் குழுவிலும் திறமையான தகுதியானவர்களே பதவி வகிக்கின்றனர். ஹஜ் ஏற்பாடுகளில் முன்னைய காலங்களில் போன்று அரசியல் சலுகைகள் வழங்கப்படவில்லை.
ஹஜ் யாத்திரிகர்கள் தமக்கு விருப்பமான முகவர்களைத் தெரிவுசெய்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முகவர்களின் கட்டண விபரமும் யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வருடம் ஹஜ் கட்டணத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறந்த சேவையினை வழங்கக்கூடிய முகவர் நிலையங்களையே யாத்திரிகர்கள் தேடிச் செல்கின்றனர்.
முகவர்கள் ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறந்த சேவை வழஙக வேண்டுமென்பதே எனது குறிக்கோளாகும். சில முகவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிலிலும் இரத்தினக்கல் வியாபாரம், மின்சார உபகரணங்கள், வர்த்தகம் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான முகவர்களை யாத்திரிகர்கள் நிராகரிக்கின்றனர்.
கடந்த காலங்களின் ஹஜ் ஏற்பாடுகள் சிறந்ததா இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் சிறந்ததா என்று மக்கள் தீர்மானிப்பார்கள். மக்களின் தீர்ப்பே முக்கியமானதாகும் என்றார்.