ஐரோப்பிய ஒன்றியத்தினால் (European Union – EU) இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, அவ்வொன்றியம் முழுமையாக நீக்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இத்தடை நீக்கம் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அது குறித்தான உத்தியோகபூர்வ முடிவை ஐரோப்பிய ஒன்றியம் தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்க காலத்தில், 2014 ஒக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சர்வதேச கடல் எல்லை தொடர்பான நிர்வாகம், கட்டுப்பாடு, மேற்பார்வை போன்றவை தொடர்பில், இலங்கை ஒழுங்கற்று செயற்படுவதாக தெரிவித்தே குறித் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் அறிவித்தலின் பின்பு சர்வதேச கடல்சார் நியமனங்கள் அடிப்படையில் சட்டப்படியாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியமானது இலங்கைக்கு மீண்டும் 03 மாத கால அவகாசமொன்றை வழங்கிய போதிலும் அதனை பின்பற்றுவதற்கு தவறியமையினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீன் ஏற்றுமதிக்கான தடையினை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தியது. இவ்வாறாள நிலையில் இலங்கையிலேற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் தடையினை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தது.
அந்த நடவடிக்கைகளுக்கு இயைவாக ஐரோப்பிய ஆணைக்குழுவானது இத்தடையை நீக்குவது தொடர்பில் சில முன்னெடுப்புக்களை முன்னெடுத்தது. இவ்வாறான நிலையில் புதிய அரசாங்கத்தினால் கடல் சார்ந்த நியமனங்களை பின்பற்றுவது தொடர்பில் அரசின் தொடர்ச்சியான செயற்பாடுகள் உட்பட சட்டவிரோத மீன்பிடிக்கு எதிரான செயற்பாடுகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் ஜூலை மாதம் அமுலுக்கு வரும் வகையில் மீன்படி தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது.