அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி தரப்பில் பெரும் கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும் (69) போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் ஹிலாரிக்கு கடும்போட்டியாக திகழ்ந்து வந்தவர், அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பெர்னீ சாண்டர்ஸ்.
இப்போது முதல் முறையாக அவர் ஹிலாரி கிளிண்டனுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வருவதை தடுத்தாக வேண்டும். அதற்காக ஜனநாயக கட்சியின் உத்தேச வேட்பாளரான ஹிலாரியுடன் இணைந்து பணியாற்றுவேன். ஜனநாயக கட்சியை மாற்றி அமைப்பதற்கு ஹிலாரியுடன் சேர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். ஜனநாயக கட்சி, மக்களுக்காக, இளைய தலைமுறையினருக்காக உழைக்கிற கட்சியாக மாற வேண்டும்” என கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஹிலாரியும், பெர்னீ சாண்டர்சும் சந்தித்து பேசினர். அப்போதும்கூட இருவருக்கிடையே முக்கிய பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு நிலவியதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், எதிர்காலத்தில் ஹிலாரியை தொடர்ந்து சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்த உள்ளதாகவும் பெர்னீ சாண்டர்ஸ் அறிவித்துள்ளார்.