Breaking
Fri. Nov 15th, 2024

கொஸ்கம சாலாவ ஆயுதக் களஞ்சிய கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை முறைமைப்படுத்துவதற்கான ஒரு விசேட குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயன்த, ஆகியோரின் தலைமையில் இக்குழுவை நியமிப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் வரை அனைத்து நடவடிக்கைகளையும் இக்குழு ஒருங்கிணைப்புச் செய்வதற்கும் இதன் போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

கொஸ்கம சாலாவ ஆயுதக் களஞ்சிய கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு துரித நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதுடன் அதன் போது ஜனாதிபதி, இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

ஒருசில அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அரங்கேற்றப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக அன்றி ஒழுங்கான திட்டமிடலின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைவின்றி அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதற்கே அரசு நடவடிக்கை மேற்கொண்டதென ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார். வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 50,000 ரூபா கொடுப்பனவை துரிதமாகவும் முறையாகவும் வழங்குவதற்கு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் வீடுகளின் பெறுமதிகளை மதிப்பீடு செய்யும் பணிகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

இதன் பொருட்டு அரச மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையாக இருக்கும் பட்சத்தில் பணிக்குழாத்தினரை பதவிக்கு அமர்த்துவதற்கும் அவர் ஆலோசனை வழங்கினார். இவ் அனைத்து நடவடிக்கைகளையும் அமுல்படுத்தும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுற்றறிக்கைகளை ஒரு தடையாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி உத்தியோகத்தரிடம் கூறினார்.

பாதிக்கப்பட்ட சாலாவ நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் போது முறையான ஒரு திட்டத்திற்கு அமைய அபிவிருத்தியடைந்த ஒரு நகரமாக கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயன்த, ரவி கருணாநாயக்க, பாடலீ சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மேல்காகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே உள்ளிட்ட ஆளும்கட்சி எதிர்க்கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

By

Related Post