வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பிலவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், பார்வையிட்டனர். அவர்ளுடன், பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று, உதய கம்மன்பில எம்.பியிடம் நலன்விசாரித்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், நீண்டநாட்களுக்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்றுதான் தலையை காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, டளஸ் அழகபெரும, குமார் வெல்கம, காமினி லொகுகே, மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் கனக ஹேரத் ஆகியோரே, வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று உதய கம்மன்பில எம்.பியிடம் நலன்விசாரித்தனர்.