எதிர்கால அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நீண்டகால வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேசத்துக்கு கடந்த 18 ஆம் திகதி விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் உறுதியளித்தார். அத்துடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படாத வகையிலும், அனர்த்தங்கள் ஏற்படும் போது பாதிப்புக்களை குறைக்கவும் விசேட திட்டம் மேற்கொள்ளப்படுமென உறுதியளித்தார்.
கொலன்னாவ வெல்லம்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்களுக்கான சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும், வீட்டின் ஆரம்ப செலவுகளுக்காகவும் முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.
வடிகான்களை அமைத்தல், நீர் வடிந்து செல்லக்கூடிய இடங்களை அதிகரித்து நீர் வடிந்து செல்லக்கூடிய இடங்களை அதிகரித்தல், வௌ்ளம் ஏற்படக்கூடிய இடங்களுக்கு பதிலாக மாற்று இடங்களை மக்களுக்கு வழங்கல் போன்ற அனைத்து செயற்பாடுகள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிஙக், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.