சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை இராணுவம் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வகையில் இராணுவத்தினால் இரண்டு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்படி சம்பவம் தொடர்பிலும் இராணுவத்தின் வசமிருந்த ஆவணங்கள் தொலைந்துள்ளதாக கூறப்பட்டிருக்கும் அதேவளை, அதனை கண்டுபிடித்து குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், இலங்கை இராணுவ பொலிசாரை உள்ளடக்கிய சிறப்பு விசாரனைப்பிரிவுகளைக் கொண்ட விசாரணை நீதிமன்றதத்தினை இராணுவத் தளபதி அமைத்துள்ளதாக இராணுவத்தினர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பாக குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் மற்றுமொரு விசாரணை நீதிமன்றம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தை பொறுத்தவரையில் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு தொடர்பில் தவறிளைக்கும் இராணுவ வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்காது எனவும் அவ்வூடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.