Breaking
Sun. Dec 22nd, 2024

பெறப்பட்டுள்ள மக்களது கருத்துக்களைக் கவனத்திற் கொண்டு எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

காலி வித்தியாலோக மகா பிரிவெனாவில் நேற்று  பிற்பகல் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“பொதுமக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே அன்றி அதற்குப் புறம்பான எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாரில்லை.

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதன் மூலம் இந்நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை மேலும் வலுவடையச் செய்வதே ஒழிய எந்தவகையிலும் அதனை சிக்கலானதாக ஆக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை.

அவ்வாறே நாட்டுக்குப் பொருத்தமான ஓர் அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவது சட்டநிபுணர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரதும் பொறுப்பாகும்” என்றார்.

மேலும், “புதிய அரசியலமைப்பு மாத்திரமன்றி அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகுகின்றன. சில நேரங்களில் அவை விசித்திரமாகவுள்ளன. நாட்டின் நன்மைக்காக அன்றி நாட்டின் அழிவுக்காக இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது.

முப்படைகளில் பணிபுரிந்து 42 – 43 வயதை அடையும் போது அதாவது நாட்டுக்காக சிறந்த சேவையை வழங்க முடியுமான ஒரு காலகட்டத்தில் ஓய்வுபெற்றுச் செல்வோர் தமது அறிவு, ஆற்றல் மற்றும் ஆக்கத்திறன் ஆகியவற்றை மென்மேலும் நாட்டுக்காக வழங்குவதற்கு வாய்ப்பளிக்கும் தேசிய அபிவிருத்தி குழுமத்தை தாபிப்பதற்கான ஒரு வேலைத்திட்டத்தை  நாட்டில் முதற்தடவையாக நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

தான் விரும்பினால் மாத்திரம் இக்குழுமத்தில் சேர்ந்து அரச நிறுவனங்களுடன் தொடர்புபட்டு தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு பங்களிப்புச் செய்ய முடியும். நாட்டில் பல்வேறு துறைகளில் நிலவும் மனிதவளக் குறைபாட்டுக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கும்” எனவும் குறிப்பிட்டார்.

By

Related Post