ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்துக்கு, இவ்வாரம் கெடுபிடி நிறைந்ததாகவே அமைந்திருக்கும் என்று, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கம், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட கொள்கைக்கு அமைவாகச் செயற்படாவிடின், அந்த அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு நன்மை பயப்பனவாய் அமையாதுவிடின், அந்த அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு அஞ்சமாட்டேன் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
அவரை, அப்பதவிக்கு மீண்டும் நியமிக்கவேண்டாமென, ஆளும் மற்றும் எதிரணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் பலர் அரசாங்கத்தைக் கோரியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, எதிர்வரும் புதன்கிழமையன்று கூடவிருக்கின்றது.
எனினும், இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, இரண்டொரு நாட்களுக்குள் முக்கிய அறிவிப்பொன்றை விடுவார் என்று பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு இவ்வாரம் கடுபிடியாக அமைந்திருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.