துரிதமாக பரவிவரும் டெங்கு நோயை தடுப்பதற்கான கிரமமான வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் டெங்கு நோய்த் தொற்று துரிதமாக பரவி வருகின்றமையை தொடர்ந்து இதற்குத் தீர்வு காணும் வகையிலே வீடுகள் தோறும் சென்று டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை இனங்கண்டு அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய இன்று முதல் குறித்த சிரமதானப் பணிகளில் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் நிலவிய அதிக மழையுடனான வானிலையால் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. 4 மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகமுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வருடத்தின் முதல் ஆறு 6 மாத காலப்பகுதியில் 19,731 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9,393 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இருந்து இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணத்தில் அதிகமான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் தெஹிவளை, கல்கிசை மற்றும் கொலன்னாவ பகுதியிலும் பதிவாகியுள்ளனர். இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளிலுள்ள புகை விசிரும் கருவிகளைக் கொழும்பிற்குக் கொண்டுவந்து, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் புகை விசிரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதனைக் கருத்திற்கொண்டு நாளை முதல் வீடு வீடாக சென்று டெங்கு நுளம்பு பரவும் இடங்களை இனங்கண்டு அதனை அழிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் ஒத்துழைப்பு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.