Breaking
Fri. Jan 3rd, 2025

தற்போதய அரசாங்கத்தில் கல்வி அபிவிருத்திக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் 83 பில்லியன் ரூபாக்களை கல்வி அபிவிருத்திக்காக ஒதுக்கியிருக்கின்றமையானது பாடசாலை, கல்விக்காக அதிகளவு நிதி ஒதுக்கியிருப்பது இலங்கையின் வரலாற்றிலே இதுவே முதல் தடவையாகும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன் இன்று வியாழக்கிழமை (30) காலை மட்டக்களப்பிலுள்ள அரசினர் ஆசிரிய கலாசாலைக்கு வருகை தந்து அங்குள்ள குறைபாடுகளை பார்வையிட்டதுடன் கலாசாலை முதல்வர் மற்றும் கல்வியியலாளர்கள் ஆசிரிய பயிலுனர்களுடனும் கலந்துரையாடினார். இதன்போதே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

பல்வேறு குறைபாடுகளுடன் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை இயங்கி வருகின்ற நிலையில் இராஜாங்க அமைச்சர் வி. ராதாகிருஸ்ணன் விரைவாக இங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் தெரிவித்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீ;சிறிநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜீ;கருணாகரம்(ஜனா) ஆகியோரும், கல்வி இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர், புதிய அரசாங்கம் பல பில்லியன் ரூபாக்களை கல்வி அபிவிருத்திக்காக ஒதுக்கியிருக்கிறது. இந்த 83 பில்லியன் ரூபாய்களை பாடசாலை, கல்விக்காக ஒதுக்கியிருப்பது இலங்கையின் வரலாற்றிலே இதுவே முதல் தடவையாகும். ஆகவே அந்தப் பாடசாலைகளின் நிலைகளை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமாக இருந்தால் அங்கிருக்கின்ற ஆசிரியர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வரவேண்டும். அதில் பிரதமர் மிகவும் அக்கறையாக இருக்கிறார். அவர்களைத் திறமையான ஆசிரியர்களாக உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதில் முக்கிய பங்கு கல்வியல் கலாசாலைகளுக்கும் உண்டு.

அந்த வகையில் அனைத்துப் பிரதேசங்களிலும் பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை சிறந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்கு பயிற்சிகளுக்காக வந்திருக்கும் ஆசிரிய பயிலுனர்கள் சிறந்த முறையில் பயிற்சிகளைப் பெற்று எதிர் கால சந்ததியினருக்கு கல்வியை வழங்க வேண்டும். முக்கியமாக இந்த பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் என்ற போதங்கள் இன்றி ஒற்றுமையாக நாம் செயற்பட வேண்டியதும் முக்கியமானதாகும்.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையின் கட்டங்களிலுள்ள குறைபாடுகள், மின்சாரப் பிரச்சினைகள், தங்குமிடப் பிரச்சினைகள் என அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக 5 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏனைய வேலைகளுக்கான சேயற்திட்டங்களை சமர்ப்பிக்கும் போது ஏனைய நிதிகளும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

By

Related Post