-சத்துரங்க பிரதீப் –
நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் பஸ்கள், ஞாயிற்றுக்கிழமை (03) அன்று இரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கும் என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அன்ஜன பிரியன்ஜித், நேற்று வியாழக்கிழமை (30) அறிவித்தார்.
‘தங்களுடைய கோரிக்கைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தராமையின் காரணத்தினாலேயே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார்.
நாரஹேன்பிட்டி, பெண்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் நேற்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
‘எமது கோரிக்கை தொடர்புடைய எந்தவொரு கலந்துரையாடல்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கலந்துரையாடவில்லை. இந்தப் பணிப்பகிஷ்கரிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பஸ்களுக்கான பயணக் கட்டணத்தை 2 ரூபாயால் அதிகரிக்காமலும் மற்றைய கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்காமலும் நாம் ஓயப்போவதில்லை. நாம் இதற்காக இரண்டு கிழமை காலக்கெடு கொடுத்திருந்தோம்’ என்று அவர் தெரிவித்தார்.