Breaking
Fri. Nov 22nd, 2024

பூமியில் தோன்றும் வண்ணமிகு துருவ ஒளியான ‘அரோரா’ வியாழன் கிரகத்திலும் தோன்றியதை நாசாவின் நவீன தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.

எண்ணற்ற அபூர்வ நிகழ்வுகளை உள்ளடக்கியது இயற்கை. அந்த அதிசய நிகழ்வுகளில் ஒன்றுதான் அரோரா எனப்படும் துருவ ஒளி. அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்டு அந்த கிரகத்தின் வட அல்லது தென் துருவத்துக்கு தள்ளப்படும்போது இந்த துருவ ஒளி வெளிப்படுகிறது. பூமியில் இந்த நிகழ்வு தோன்றுகிறது.

இந்நிலையில், பூமியைப்போன்று வியாழன் (ஜூபிடர்) கிரகத்தின் மீது தோன்றிய துருவ ஒளியை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா படம் எடுத்து வெளியிட்டுள்ளது. நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவங்களில் காணப்படும் அரோரா அழகாக மின்னுகிறது.

சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமான வியாழன், பூமியைவிட பலமடங்கு அதிக கொள்ளளவு கொண்டது. பூமியில் காணப்படும் மின்னல்களை விட இங்கு ஆயிரம் மடங்கு வலுவான மின்னல்கள் உருவாகும். அதேபோல், பூமிக்கு மேலே தோன்றக்கூடிய துருவ ஒளியைவிட ஆயிரம் மடங்கிற்கும் அதிகமான அடர்த்தியுடன் பிரகாசமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

சூரியனிடமிருந்து ஐந்தாவது வளையத்தில் இருக்கும் வியாழனில் திடமான மேற்பரப்பு இல்லாமல், பிரதானமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களையே கொண்டதால், இது வாயுக்கிரகம் என்று அழைக்கப்படுகிறது. திரவ நிலையில் உள்ள உலோகத்தன்மை வாய்ந்த ஹைட்ரஜன் இந்தக் கிரகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஹைட்ரஜன் தான் ஜூபிடரின் தீவிரமான காந்தப் புலத்தை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது.

தீவிர காந்தப்புலத்தால் உருவான துருவ ஒளிக்கோவை அடங்கிய வீடியோவையும் நாசா வெளியிட்டிருக்கிறது. இதில் வியாழன் வடதுருவத்தின் அருகில் நீல நிறத்திலான துருவ ஒளிக்கோவை அசைந்தாடுவது போன்று தெரிகிறது.

By

Related Post