இலங்கையின் கடல் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டிற்காக 2.4 பில்லியன் ரூபா நிதியுதவியை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. கடல் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் திட்டத்திற்காக இலங்கை கரையோரப் பாதுகாப்புப் பிரிவிற்கு உதவும் வகையில் ஜப்பான் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் ரோந்து சேவைகளை விஸ்தரிப்பதற்காக கரையோரப் பாதுகாப்புப் பிரிவிற்கு இரண்டு படகுகளை கொள்வனவு செய்வதற்கும், கடற்கொள்ளை எதிர்ப்பு செயற்பாடுகள், நாடு கடந்த குற்றங்களைத் தடுத்தல், கடல் சூழல் மற்றும் வளங்கள் அழிவுகளைத் தடுத்தல் போன்ற செயற்பாடுகளை திறனுடன் முன்னெடுப்பதற்கு இந்த நிதியுதவி ஏதுவாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த நிதியுதவிக்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகானுமா மற்றும் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் நேற்று முன்தினம் (30) கைச்சாத்திட்டுள்ளனர்.