நோன்புப் பெருநாளையொட்டி, நாடளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 7 ஆம், 8 ஆம் திகதி களில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட்.தாஜூடீன் தெரிவித்தார்.
குறித்த இரு விடுமுறை தினங்களுக்குமான பதில் பாடசாலை ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடாத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சு கேட்டுள்ளது. இது குறித்து, கல்வியமைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் கல்விப் பணிப்பாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் பணிப்பாளர் தாஜூடீன் மேலும் தெரிவித்தார்.
புனித ரமழான் நோன்பு விடுமுறைக்காக கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி மூடப்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் மீண்டும் ஜூலை 7 ஆம் திகதி திறக்கப்பட வேண்டும் என அமைச்சு ஏற்கனவே வெளியிட்டுள்ள தவணை நாட் கலண்டரில் குறிப்பிட்டுள்ளது.
இருந்த போதிலும், நோன்புப் பெருநாளைத் தொடர்ந்துவரும் 7 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளை மீளத் திறப்பதில் எதிர்கொள்ளப்படும் சிரமங்கள் குறித்து, முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் இரு தினங்களையும் விடுமுறையாக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்பிரகாரம், குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பிரஸ்தாப இரு தினங்களையும் விடுமுறையாக்கும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். முஸ்லிம் பாடசாலைகள் விடுமுறையின் பின்னர் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக 11 ஆம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளன.
முஸ்லிம்களின் நலன்கருதி, அவசர நடவடிக்கை மேற்கொண்ட கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இதற்காக கோரிக்கை விடுத்த முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோருக்கும், அமைச்சின் அதிகாரிகளுக்கும் முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.