Breaking
Mon. Dec 23rd, 2024

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த 56 நிபந்தனைகள், 16 நிபந்தனைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளவும் பெற்றுக்கொள்வதால், இலங்கைக்குச் சாதகமான பல நன்மைகளை எதிர்பார்க்க முடியும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், இந்த வரிச்சலுகை மீளவும் கிடைக்குமா, இல்லையா என்பது தொடர்பில், இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் உறுதியாக அறிவிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது ஆட்சியிலுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டும், அவ்வாட்சியினால் திருப்தியடைந்த நிலையிலேயே, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைக்காக விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் மூன்று வருடங்களுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த நிதியுதவியை, இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க, அந்த வங்கி தீர்மானித்துள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான வேலைத்திட்டங்களுக்காகவே, மேற்படி நிதியுதவி வழங்கப்படவுள்ளது என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் வென்காய் ஷெங் அறிவித்தார்.

2015ஆம் ஆண்டில், இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்த மேற்படி வங்கி, இவ்வருடத்தில் அதனை 700 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்துடன், 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இலங்கையில் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க, ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளதாக, தனது இலங்கைக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய ஷெங், மேலும் தெரிவித்தார்.

By

Related Post