மத்திய ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு நிகழ்ச்சி ஒன்றில், பெரிய கூர்மையான ஆப்பு போன்ற வால் கொண்ட கழுகு ஒன்று சிறுவன் ஒருவனை தூக்கி பறந்து செல்ல முயன்றது.
அலிஸ் ஸ்ப்ரிங்ஸ் டெசர்ட் பார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த பெரிய கழுகு பயத்தில் அலறிய அந்த சிறுவனின் தலையின் மேல் தனது நகங்களை பதித்ததை கூட்டத்தினர் ஸ்தம்பித்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதை நேரில் பார்த்தவர்கள் அந்த பறவை, அச்சிறுவனை ஒரு சிறிய விலங்கைப் போல தூக்கிச் செல்ல முயன்றதாக கூறுகின்றனர் .
ஆறிலிருந்து எட்டு வயதானவனாக கருதப்படும் அச்சிறுவன், முகத்தில் ஒரு லேசான வெட்டுக் காயத்துடன் உயிர் பிழைத்தான்.
சிறுவனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்
அந்த கழுகு 15 மீட்டர் தொலைவிலிருந்து அச்சிறுவனை நோக்கி பறந்து வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த கோனெல் என்பவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அச்சிறுவன் தனது ஜிப்பை மேலும் கீழுமாக நகர்த்திக் கொண்டிருந்ததாகவும், அந்த சத்தத்தில் திசை திருப்பப்பட்ட அக்கழுகு அவனது சட்டையை தூக்க முயன்றதாக அருகாமையில் அமர்ந்திருந்தவர் தெரிவித்ததாக கோனெல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து முழுமையான விசாரணை நடந்து வருவதாகவும் மேலும் விசாரணை நடந்து வருவதால் அந்த கழுகு நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்படும் எனவும் பூங்கா தரப்பு தெரிவித்துள்ளது.