-விடிவெள்ளி ARA.Fareel-
பொதுபலசேனா அமைப் பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் மியன்மாரின் அசின் விராது தேரரும் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை உடனடியாக நாட்டுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
இரு நாடுகளிலும் தற்போது நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் பள்ளிவாசல்களை அழிப்பதற்கும் இருவரும் உடன்பட்டு உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது என ஜாதிகபலசேனாவின் பொதுச் செயலாளரும் மஹியங்கனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
வட்டரக்க விஜித தேரர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடும் விராது தேரரும் இலங்கை முஸ்லிம் எதிர் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஞானசார தேரரும் இணைந்து தமது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்துவதற்காகவே உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த உடன்படிக்கை அம்பலப்படுத்தப்பட வேண்டுமென நான் சவால்விடுக்கிறேன். இரு நாடுகளின் முஸ்லிம் விரோத குழுக்களை பரிமாறிக் கொள்ளவும் இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஞானசார தேரரின் மியன்மார் விஜயத்தை கொண்டாடுவதற்கு அசின் விராது தேரரின் கும்பல் அங்கு பள்ளிவாசல்கள் சிலவற்றை தீக்கரையாக்கியது. மஹியங்கனையில் ஆரம்பிக்கப்பட்ட அல்லாஹ்வையும் நபிகள் நாயகத்தையும் அவமதிப்பது தொடராக நடைபெற்று வருகிறது.
மதத்தையும் மதத்தலைவர்களையும் கடவுளையும் நிந்திப்பதை எந்தவோர் மதத்தவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மக்களின் மனதில் குரோதங்களை உருவாக்கி நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்ல ஒரு சில அமைப்புகள் திட்டமிட்டு செயற்படுகின்றன. இனங்களுக்கிடையில் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
அவ்வாறான அமைப்புகள் தமக்கு நிதியுதவி வழங்கும் அமைப்புகளின் செயற்திட்டங்களை அரங்கேற்றுகின்றன. அதனால் சமாதானத்தை விரும்பும் மக்கள் இது விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
பௌத்த சாசனத்துக்கு பல சவால்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார ரீதியிலும் பெளத்தர்கள் பின்னடைவுகளைச் சந்தித்துவருகிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் பௌத்தர்களின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் பௌத்த சாசனத்தை மேம்படுத்துவதற்காகவுமே பௌத்த குருமார்கள் பாடுபட வேண்டும்.
அதைவிடுத்து முஸ்லிம் எதிர்நடவடிக்கைகளை முன்னெடுத்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதால் பௌத்தர்கள் மேலும் அபாய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
இந்தச் சிறிய நாட்டு மக்கள் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்வதற்கு உறுதிபூணுமாறும் நாட்டை அழிக்கும் அமைப்புகளின் உறவுகளிலிருந்து விடுபடுமாறும் வேண்டிக் கொள்கிறேன். பௌத்தத்தின் பெயரைப் பாவித்து பௌத்தர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறிக் கொண்டு இலங்கையில் முஸ்லிம் எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மியன்மாரில் மேற்கொண்டாலும் அது மிகவும் ஆபத்தானது.
இலங்கையில் தற்போது மீண்டும் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதுடன் தாக்கப்பட்டும் வருகின்றன. மஹியங்கனை, மொனராகலை, கண்டி, தெஹிவளை மற்றும் அம்பிட்டிய பகுதிகளில் பௌத்த பெயர்களில் முன்நிற்கும் குழுவினர் பள்ளிவாசல்களைத் தாக்கியிருக்கின்றனர்.
எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு ஆபத்துக்கள் ஏழாதிருக்க அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நல்லிணக்கத்தை உருவாக்க அரசு துரிதமாக செயற்பட வேண்டும்.
இனங்களுக்கிடையில் பேதங்களை உருவாக்குவதற்கு சூழ்ச்சி செய்யும் பொதுபலசேனா அமைப்பு மியன்மாரில் கையொப்பமிட்ட உடன்படிக்கையை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.