Breaking
Sat. Nov 23rd, 2024

இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை சட்டரீதியாக எவராலும் வீழ்த்த முடியாது. இன்று பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இந்நிலையில் வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதில் பலன் இல்லை என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

மஹரமகவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி பயணத்தை ஸ்தம்பிக்கச் செய்வதற்கு சுயநல அரசியல்வாதிகள் சிலர் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் தாம் செய்த ஊழல்களை மறைப்பதற்காக அரசாங்கத்தை ஸ்திரமின்மையை நோக்கி ஈட்டுச் செல்ல முயற்சிக்கின்றனர். இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை சட்டரீதியாக எவராலும் வீழ்த்த முடியாது.

கடந்த 70 வருடங்களாக இந்த நாட்டை ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மாறிமாறி ஆட்சி செய்தன. இன்று அந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இந்நிலையில் வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதில் பலன் இல்லை.

எமது தேசிய அரசாங்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. நாம் இன்று மக்களின் வாழும் உரிமை, ஊடக சுதந்திரம், நீதித்துறை சுயாதீனம் என்பவற்றை உறுதிப்படுத்தியுள்ளோம். இந்த நாட்டில் காணப்பட்ட மிகவும் கீழ்த்தரமான அரசியல் கலாசாரத்தை நாம் இல்லாதொழித்துள்ளோம்.

ஐரோப்பாவிடமிருந்து  ஜீ.எஸ்.பி. சலுகையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது அரசாங்கம் வற்வரியை அதிகரித்து மக்களை சுமைகளுக்குள் தள்ளியுள்ளது என்று சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நாம் மக்களின் மீது பொருளாதார சுமையை சுமத்தவில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கான வற்வரியை நீக்கியுள்ளோம்.

கடந்த அரசாங்கம் பாரிய கடன்களை பெற்றுவிட்டது. அவற்றை சாபம் எமது அரசாங்கத்திற்கு வந்துள்ளது. தேசிய வருமானத்தில் 97 வீதம் கடனும் வட்டியும் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் போன்ற தோல்வியடைந்த திட்டங்கள் எமது அரசாங்கத்திடம் இல்லை.

By

Related Post