தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார்.
வற் வரி அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த தீர்ப்பிற்கு அமைய தொலைபேசி கட்டணங்களில் வற் வரியை சேர்க்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி வற் வரி அதிகரிப்பின் அடிப்படையில் தொலைபேசி கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது என நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி எனப்படும் வற் வரியை அரசாங்கம் உயர்த்தியதன் பின்னர், தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசிக் கட்டணங்களை உயர்த்தியிருந்தன.
இதன்படி தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 49.5 வீதத்தினால் உயர்த்தப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு அமைய பாவனையாளர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் அதிகரிக்கப்பட்ட வற் வரி கட்டணத்தில் சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் சுனில் எஸ் சிறிசேன தெரிவித்துள்ளார்.
வற் வரிக்கு எதிராக கடைகளில் எதிர்ப்பு பதாகைகள்
வற் வரிக்கு எதிராக கடைகளில் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
அரசாங்கத்தினால் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள வற் வரி திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் கடைகளில் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
சுமார் 2500 எதிர்ப்பு பதாகைகள் கடைகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக களனிவெலி வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கங்கானாத் ஜயசிங்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
வெலிகடை, ராஜகிரிய, மாலம்பே, அதுருகிரிய, கொடகம, ஹோமாகம, கொட்டாவ, மஹல்வராவ, ஹோகந்தர மற்றும் விதயால சந்தி ஆகிய இடங்களில் காணப்படும் வர்த்தக நிலையங்களின் அனைத்து கடைகளிலும் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாளையும் நாளை மறுதினமும் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அரசாங்கம் வற் வரி திருத்தச் சட்டத்தை நீக்காவிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.