கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை விற்பனை செய்யாத 100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட 100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.டி. அரந்தர கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, பதுளை, மொனராகல், குருணாகல், புத்தளம், மாத்தளை, நுவரெலியா, கண்டி, வவுனியா, பொலனறுவை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இவ்வாறு சுற்றி வளைப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தோல் உரிக்கப்படாத கோழி இறைச்சி விற்பனை செய்வதனை சில வர்த்தக நிலையங்கள் தவிர்த்துக் கொண்டு, சுப்பர் மார்க்கட்டுகளில் போன்று கோழி இறைச்சியின் பாகங்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (SMR)